சென்னை : காசிமேடு எண்ணூர் விரைவு சாலையில் வடசென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கரோனாவில் வாழ்வாதரம் இழந்த ஏழை, எளியோருக்கு நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
வடசென்னை கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் பிரகதீஷ்குமார் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் இளைஞரணி மாநில தலைவரும், வேளச்சேரி சட்டப்பேரவை உறுப்பினருமான ஜே.எம்.எச்.ஹசன் மௌலானா கலந்துகொண்டு பொதுமக்களுக்கு அரிசி, காய்கறி, மளிகை பொருட்கள் அடங்கிய நலத்திட்டங்களை வழங்கினார்.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்," மக்களுக்கு அவ்வப்போது அநீதி இழைப்பதை மோடி அரசு கடமையாக கொண்டுள்ளது. கேஸ் விலை உயர்வு, தற்போது பெட்ரோல் விலை சதம் அடித்துள்ளது. ஆனால் மோடி சந்தோஷமாகத்தான் இருக்கிறார்.
மக்களை பற்றிய எந்த கவலையும் அவருக்கு இல்லை. மக்கள் தன்னை என்ன செய்துவிடுவார்கள் என்ற எண்ணத்தில் இருந்து வருகிறார். பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தால் அத்தியாவசிய பொருள்களின் விலை ஏறிக்கொண்டே இருக்கிறது. கச்சா எண்ணெய் விலையை பொருட்படுத்தாமல் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையை மோடி அரசு ஏற்றிக்கொண்டே இருக்கிறது. இதனால் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
விலையேற்றம் மூலம் பெறப்படும் பணத்தின் மூலம் தனது நண்பர்களான அதானி, அம்பானிக்கு கடன் கொடுக்க எளிமையாக இருக்கும். அதனால்தான் மக்களிடம் இருந்து வரிப்பணத்தை பிடுங்கி கொண்டிருக்கிறார்.
மோடி அரசாங்கம் ஜனநாயக படுகொலை செய்து வருகிறது. மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மோடி அரசால் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்க இயலாது.
வருகிற எட்டாம் தேதியன்று இளைஞர் காங்கிரஸ், மகளிர் காங்கிரஸ் கட்சி சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை எதிர்த்து பெட்ரோல் பங்க் வாசலில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
பெட்ரோல், டீசல் விலைக்கு எதிராக கையெழுத்து இயக்கமும் நடத்தப்படும். இதனை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி முன்னெடுத்து நடத்துவார்" என்றார்.