பெண்கள், குழந்தைகள் மீது நிகழ்த்தப்படுகிற வன்முறைக்கு எதிராகவும் போதையற்ற சமூகத்தை உருவாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நவம்பர் 25ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 4ஆம் தேதி வரை பத்து நாட்கள் நடைபெறும் இந்த நடைப்பயணத்தில், ஏராளமான பெண்கள் கலந்துகொள்ள இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஈடிவி பாரத் செய்தியாளர்களுக்கு சிறப்புப் பேட்டியளித்த அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் வாலண்டீனா, "பெண்கள், குழந்தைகள் மீது நிகழ்த்தப்படுகிற வன்முறைக்கு எதிராகவும் போதையற்ற சமூகத்தை உருவாக்கவும், கடலூர் மாவட்டம் வடலூரிலிருந்தும், திருவண்ணாமலையிலிருந்து சென்னை வரையும் 400 கி.மீ நடைப்பயணம் நடத்தவுள்ளோம்.
தமிழ்நாட்டில் பெண்கள் மீதான குற்றங்கள் குறைந்திருப்பதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் அறிக்கை கூறுகிறது. பெண்கள் தொடர்பான வழக்குகள், காவல் நிலையங்களில் முறையாகப் பதிவு செய்யப்படாததே இதற்கு காரணம். குற்றப்பிரிவு கொடுக்கும் தகவல்களை வைத்து அறிக்கை தயார் செய்யப்படுவதால், பெண்கள் மீதான வன்முறைகள் குறைவாக இருப்பதாகக் காட்டுவதற்கே தமிழ்நாடு அரசும், காவல்துறையும் முயற்சிக்கிறது.
பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க 'விசாகா' கமிட்டி அமைக்க வேண்டும். நுன் நிதி நிறுவனங்கள் பெண்களிடம் அளித்த கடனை திரும்பப் பெறுவதற்காக தற்கொலைக்கு தள்ளும் அளவிலான இடையூறுகளை அளித்து வருவதை தடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
அதேபோல், தமிழ்நாடு அரசே மதுவை விற்று புதிய குடிமகன்களை உருவாக்குகிறது. இதனால், லட்சக்கணக்கான இளம் பெண்கள், கணவன்மார்களை இழந்து விதவைகளாக வாழக்கூடிய அவல நிலை ஏற்படுகிறது. இதனால், போதையற்ற, வன்முறையற்ற தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை உருவாக்க வேண்டும் என்னும் அடிப்படையில், அரசுக்கு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எங்களது நடைபயணத்தை மேற்கொள்கிறோம்.
வடலூரில் தொடங்கும் இந்நிகழ்ச்சியை, இந்து முன்னணி நிர்வாகி ஒருவர், காதலிப்பதாகக் கூறி ஏமாற்றி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த, அரியலூர் நந்தினியின் சகோதரி, கொடியசைத்து தொடங்கி வைப்பார்.
திருவண்ணாமலையில் தொடங்கும் பயணத்தை, சேலம் ஆத்தூரில் தலைவெட்டி படுகொலை செய்யப்பட்ட ராஜலட்சுமியின் தாயார், கொடியசைத்து தொடக்கி வைக்கிறார். ஏராளமான பெண் செயற்பாட்டாளர்கள் இந்த நடைபயணத்தில் கலந்து கொள்கின்றனர்". இவ்வாறு அவர் தெரிவித்தார்.