சென்னை டி.பி. சத்திரத்தில் மனவளர்ச்சி குன்றிய இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்முறை செய்த குற்றவாளிகளைக் கைது செய்யக்கோரி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், கீழ்ப்பாக்கம் துணை ஆணையரிடம் கோரிக்கை மனு ஒன்றையும் கொடுத்தனர்.
அதில், “சென்னை டி.பி. சத்திரம் பகுதியில் தெருவோர குடிசையில் மனவளர்ச்சி குன்றிய 22 வயது மகளுடன் தாய் ஒருவர் வசித்துவருகிறார். இந்தச் சூழலில், கடந்த 13ஆம் தேதியன்று இரவு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த இளம்பெண்ணை லிங்கன் என்பவர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து தாக்கியுள்ளனர்.
மேலும், கத்திமுனையில் தாயின் கண்முன்னே அந்த மனவளர்ச்சி குன்றிய இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்முறை செய்துள்ளனர்.
இந்தச் சம்பவம் நடந்ததும் 4 மணியளவில் தாயும், மகளும் கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இச்சம்பவம் குறித்து முதல் தகவல் அறி்க்கை தாக்கல்செய்யப்பட்டது. ஆனால், புகார் கொடுத்து ஒன்பது நாள்கள் ஆகியும் குற்றவாளிகளை காவல் துறையினர் கைதுசெய்யவில்லை. இதனால் லிங்கனும், அவரது கூட்டாளிகளும் சுதந்திரமாக வெளியில் நடமாடுகின்றனர்.
எனவே, குற்றவாளிகளை உடனடியாக கைதுசெய்ய வேண்டும், வழக்கு முடியும்வரை அந்தப் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவதோடு, உடனடியாக உயர் மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு, உரிய இழப்பீடு பெற்றுத் தர வேண்டும். தனிமையில் வாழும் அவர்களுக்கு குடியிருக்க அரசு வீடு ஒதுக்க வேண்டும்” எனக் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கோவிஷீல்ட் கரோனா தடுப்பு மருந்து: மனித பரிசோதனை தொடக்கம்!