சென்னை புதுப்பேட்டை நரியங்காடு காவலர் குடியிருப்பில் புதிதாக ரூ.10 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள சிறுவர் பூங்காவை சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் இன்று திறந்துவைத்தார். இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆணையர்கள் அமல்ராஜ், தினகரன், காவல் துறையினரின் குடும்பத்தினர் பங்கேற்றனர்.
சிறுவர் பூங்காவை திறந்துவைத்த பிறகு குழந்தைகளுடன் காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் கலந்துரையாடினார். இதையடுத்து காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் செய்தியாளர்களிடம் கூறுகையில், "சென்னை காவல் துறையினர் கரோனா காலத்தில் அவர்களுடைய பாதுகாப்பை பார்க்காமல் நேர்மையாகப் பணியாற்றிவருகின்றனர். கரோனா காலத்தில் பணிபுரிந்து காவல் துறையினரின் குடும்பத்தினருக்கு பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டுவருகின்றன.
காவல் துறையினரின் மகன்கள், மகள்களுக்கு கல்லூரியில் சேர்ப்பதற்காகவும் உதவிகள் செய்துவருகிறோம். 126 பேருக்கு அவர்கள் விரும்பும் கல்லூரியிலேயே இடம் வாங்கி கொடுத்துள்ளோம். சென்னையில் உள்ள காவலர்கள் குடியிருப்பில் உள்ள குறைகளை களைய அங்கேயே கமிட்டி ஒன்று அமைத்து தீர்க்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.
புதுப்பேட்டை நரியங்காடு காவலர் குடியிருப்பில் ரூ. 10 லட்சம் செலவில் புதிதாக சிறுவர் பூங்கா தொடங்கி வைத்துள்ளோம். இப்பூங்காவில் உடற்பயிற்சி செய்ய வசதிகள் செய்யப்பட்டுள்ளது. சென்னை காவல் துறையில் பணிபுரிந்து வரும் காவலரின் மகன்கள், மகள்களுக்காக வேலைவாய்ப்பு முகாம் நவம்பர் மாதம் நடத்தவுள்ளோம்.
ஸ்விகி, சொமேட்டோ போன்ற ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் புதிதாக டெலவரி ஊழியர்களை பணியமர்த்தும்போது காவல் நன்னடத்தை சான்று பெற்றிருக்க வேண்டும். குற்றச் சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் சிக்காமல் இருக்க சிலர் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களின் ஊழியர்கள் போல் சீருடை அணிந்து திரிகின்றனர். இதனால் காவல் துறை நன்னடத்தை சான்று பெறுவது அவசியம்.
டெலிவரி நிறுவனங்கள், ஊழியர்கள் குற்றப் பின்னணி குறித்து தெரிந்துகொள்ள காவல் துறையின் இணைய சேவையான காவல்துறையின் Cctns மூலம் காவல் நன்னடைத்தை சான்று பெறலாம். அது அவசியமான ஒன்று. அதனை நிறுவனங்கள் பின்பற்ற வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: துர்கா பூஜையில் பங்கேற்கும் இஸ்லாமியர்கள்!