சென்னை: சிங்கப்பூரில் இருந்து வரும் ஏர் இந்தியா பயணிகள் விமானம் சென்னைக்கு காலை 8:45 மணிக்கு வந்துவிட்டு மீண்டும் அதே விமானம் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து காலை 10:05 மணிக்கு டெல்லி புறப்பட்டு செல்லும். இன்று டெல்லி செல்ல வேண்டிய அந்த விமானத்தில் 148 பயணிகள் பயணிக்க இருந்தனர். அவர்கள் அனைவரும் காலை 8:30 மணிக்கு முன்னதாகவே சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு வந்து விட்டனர்.
ஆனால் அந்த விமானம் திடீரென தாமதம் என்று அறிவிக்கப்பட்டது. நான்கரை மணி நேரம் தாமதமாக இன்று பிற்பகல் 2:30 மணிக்கு புறப்பட்டு செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்து விமானம் தாமதத்திற்கு என்ன காரணம் என்று அலுவலர்களிடம் கேட்டனர்.
அப்போது சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வரவேண்டிய ஏர் இந்தியா பயணிகள் விமானம் தாமதமாக வந்து கொண்டு இருக்கிறது. எனவே சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு காலை 11:30 க்கு புறப்பட்டு செல்லும் விமான பயணிகளை டெல்லிக்குப் போக வேண்டிய இந்த விமானத்தில் சிங்கப்பூருக்கு அனுப்பி வைக்கிறோம். சிங்கப்பூரில் இருந்து தாமதமாக வரும் விமானத்தில் டெல்லி செல்ல வேண்டிய பயணிகளாகிய உங்களை இன்று பிற்பகல் 2:30 மணிக்கு டெல்லிக்கு அனுப்பி வைக்கிறோம் என்று கூறினார்கள்.
இதை அடுத்து ஆத்திரமடைந்த பயணிகள் ஏர் இந்தியா கவுண்டரை சூழ்ந்து கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் உள்ளிருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர். உடனடியாக விமான நிலைய அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகள் பயணிகளை சமாதானம் செய்து, அமைதிப்படுத்தினர்.
அதில் மிகவும் அவசரமாக டெல்லி செல்ல இருந்த சுமார் 20 பயணிகளை மட்டும் காலை 11:30 மணிக்கு சென்னையில் இருந்து டெல்லி செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் அனுப்பி வைத்தனர். மற்ற பயணிகள் சென்னை விமான நிலைய ஓய்வறையில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
சிங்கப்பூரில் இருந்து சென்னை வரும் ஏர் இந்தியா விமானம் தாமதமானதன் காரணமாக சென்னையிலிருந்து டெல்லி செல்ல இருந்த 148 பயணிகள் சென்னை விமான நிலையத்தில் நான்கு மணி நேரத்துக்கு மேலாக காத்திருந்து கடும் அவதிக்குள்ளாகினர்.
இதையும் படிங்க: சென்னை ஒருங்கிணைந்த புதிய முனையத்தில் கூடுதல் சர்வதேச விமான சேவை அதிகரிப்பு!