சென்னை : ஆம்பேத்கர் மற்றும் திருவள்ளுவர் குறித்து அவதூறு கருத்து வெளியிட்டதாக முன்னாள் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் தலைவர் ஆர்பிவிஎஸ் மணியனை (RBVS Manian) போலீசார் கைது செய்தனர். இவர் இந்து மதங்கள் தொடர்பாக பல்வேறு புத்தகங்களை எழுதி உள்ளார். மேலும் பிரபல ஆன்மீக பேச்சாளராக காணப்படுகிறார்.
சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது வீட்டில் அதிகாலை வேளையில் தனிப்படை போலீசார் ஆர்பிவிஎஸ் மணியனை கைது செய்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆர்பிவிஎஸ் மணியனை கைது செய்த போலீசார், அவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்துத்துவா அமைப்புகளில் முக்கிய பதவிகளில் ஆர்பிவிஎஸ் மணியன் இருந்து உள்ளார். தற்போது பிரபலமான இந்துத்துவ பேச்சாளராக வலம் வரும் ஆர்பிவிஎஸ் மணியன் கடந்த சில நாட்களுக்கு முன் பேசியதாக வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் அம்பேத்கர் மற்றும் திருவள்ளுவர் குறித்து அவர் அவதூறு கருத்து வெளியிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தவிர பல்வேறு சாதி மற்றும் மத ரீதியிலான அவதூறு கருத்துகளையும், பிற்படுத்தப்பட்ட பட்டியிலன பெண்கள் குறித்தும் விரும்பத்தகாத வகையில் அவர் கருத்து வெளியிட்டதாக வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவர் மீது நடவடிக்கை எடுக்க பல்வேறு தரப்பினரும் சமூக வலைதளங்களில் தொடர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இந்நிலையில், இன்று (செப். 14) அதிகாலை 3.30 மணி அளவில் சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது வீட்டில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. சென்னை தெற்கு இணை ஆணையர் தலைமையிலான தனிப்படை போலீஸ் ஆர்பிவிஎஸ் மணியனை கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க : "உதயநிதிக்கு கச்சத்தீவு ஸ்பெல்லிங் தெரியுமா.?" - சி.வி.சண்முகம் காட்டம்!