சென்னை: கடந்த ஜனவரி 27ஆம் தேதி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்ட திமுக தலைவர் ஸ்டாலின், தமிழ்நாடு அரசை விமர்சித்து உரையாற்றினார். கடந்த ஜூன் 5ஆம் தேதி உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி குறித்து ட்விட்டரில் ஸ்டாலின் சில கருத்துகளைப் பதிவிட்டார்.
அதேபோல முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்தும் ஸ்டாலின் பேசியது முரசொலி பத்திரிகையில் செய்தியாக வெளியிடப்பட்டது. இதேபோல, தமிழ்நாடு முதலமைச்சர், அமைச்சர்களைத் தொடர்ந்து விமர்சனம் செய்ததாக திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எதிராக 6 அவதூறு வழக்குகளை தமிழ்நாடு அரசு சார்பில் தனித்தனியாகத் தாக்கல்செய்யப்பட்டது.
இந்த வழக்குகளில் நேரில் முன்னிலையாகி விளக்கமளிக்க வேண்டும் என நாடாளுமன்ற-சட்டமன்ற உறுப்பினர்களின் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் டிசம்பர் 2ஆம் தேதி ஸ்டாலினுக்கு அழைப்பாணை அனுப்பி உத்தரவிட்டது.
ஆனால், அவதூறு வழக்குகளில் டிசம்பர் 2ஆம் தேதி முன்னிலையாகாத நிலையில் இன்று (டிச. 30) சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள, நாடாளுமன்ற-சட்டமன்ற உறுப்பினர்களின் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி கே. ரவி முன்னிலையில் மு.க. ஸ்டாலின் முன்னிலையாகி விளக்கமளிக்க உள்ளார்.
இதையும் படிங்க: அதிமுகவை ஓபிஎஸ் உடைப்பார்: மு.க. ஸ்டாலின்