சென்னை: இந்திய தொழில்நுட்ப கழகம் (ஐ.ஐ.டி) சென்னை வளாகத்தில் மூன்று புள்ளிமான்கள் அடைப்பான் நோய் (Anthrax) தாக்கத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் இறந்துள்ளதாக கிண்டி தேசிய பூங்காவின் வனக்காப்பாளர் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்ற தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தால் அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில், கிண்டி தேசிய பூங்காவின் கால்நடை மருத்துவர், இறந்து போன மான்களிலிருந்து மாதிரி பொருள்கள் சேகரித்து, அடைப்பான் நோய் உறுதி செய்ய பரிசோதனைக்காக பல்கலைக்கழக மைய ஆய்வு கூடத்திற்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இறந்த மானின் இரத்த கறைப்பட்ட தரைப் பகுதியிலிருந்து மண் மற்றும் ரத்தத்துளிகள் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் மாதவரம் ஆய்வு மையத்திற்கு அனுப்பப்பட்டன. அதனைப் பரிசோதனை செய்ததில் ஆந்ராக்ஸ் நோய் பாதிப்பு இல்லை என்பது தெரியவந்துள்ளது.
மேலும், ஏற்கனவே தற்காப்பு நடவடிக்கையாக இறந்துபோன மான்களின் பிரேதங்கள் பாதுகாப்பான முறையில் முறைப்படி அப்புறப்படுத்தபட்டன. அடைப்பான் நோய் பரவலில் நாய்களுக்கு எந்தவிதமான பங்கும் இல்லை. மேலும் நாய்களால் மக்களுக்கு நோய் பரவல் ஏற்படாதென்றும் இதுபற்றி மக்கள் பீதியடைய வேண்டாம் என்று தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:மான் அமைச்சரவையில் 10 'சிங்'கங்கள்.. கவர்னர் மாளிகையில் இன்று பதவியேற்பு!