சென்னை: நாட்டில் அதிகரித்துவரும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டை களையும் நோக்கில் தூத்துகுடியில் மூடப்பட்டிருந்த ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் உற்பத்திக்காக நான்கு மாதங்கள் திறக்கவுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தற்போதைய அரசும், எதிர்க்கட்சியான திமுகவும் கடந்த காலங்களில் இரட்டைவேடம் போட்டதால், இப்போதும் அவர்களை நம்புவதற்கு தூத்துக்குடி மக்கள் தயாராக இல்லை. ஆக்சிஜன் பற்றாக்குறையைப் பயன்படுத்தி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயக்குவதற்கான வேலைகளை தந்திரமாக அதன் உரிமையாளர்கள் செய்துவிடுவார்களோ என்ற பயம் தூத்துக்குடி மக்களிடம் இருக்கிறது.
அவர்களின் இந்த உணர்வை புரிந்துகொண்டு, ஸ்டெர்லைட் ஆலைக்குள் ஆக்சிஜன் உற்பத்திக்கு மட்டும் அடுத்த நான்கு மாதங்களுக்கு நடைபெறுவதை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும். இதனை மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழு மட்டுமின்றி, சென்னை உயர்நீதிமன்றமும் கண்காணிக்க வேண்டும்" என கேட்டுக்கொள்கிறேன்.
" தற்போதுள்ள சூழலில் ஆக்சிஜன் பற்றாக்குறையை சமாளிப்பதற்கு ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் ஆக்சிஜன் சிலிண்டர்களை வெளிமாநிலங்களுக்கு அனுப்பும் முடிவை நிறுத்த வேண்டும். தமிழ்நாட்டின் தேவையே இன்னும் பூர்த்தியாகாத நிலையில், இங்கே உற்பத்தியாகும் ஆக்சிஜனை வெளி மாநிலங்களுக்கு அனுப்புவதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. மேலும், வாய்ப்புள்ள மற்ற ஆலைகளிலிருந்து ஆக்சிஜன் தயாரிப்பதற்கான நடவடிக்கைகளையும் தாமதமின்றி அரசு மேற்கொள்ளவேண்டும்.
இதுமட்டுமின்றி, தடுப்பூசி விலையை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது, அரசு மருத்துவமனைகளில் தொடர்ந்து இலவசமாக தடுப்பூசிகளை போடுவது ஆகியவற்றையும் மத்திய, மாநில அரசுகள் முறையாகக் கண்காணிக்க வேண்டும் " என வலியுறுத்துவதாக குறிப்பிட்டுள்ளார்.