சென்னை: வியாசர்பாடி எம்.எம். கார்டன் பகுதியைச்சேர்ந்த கூலித்தொழிலாளி ரவி என்பவரின் மகள் பிரியா (17). ராணி மேரி கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்ததுடன் கால்பந்தாட்ட வீராங்கனையாகவும் இருந்து வந்தார்.
இந்நிலையில் கடந்த ஆண்டு நடைபெற்ற கால்பந்து போட்டியில் கலந்து கொண்ட பிரியாவுக்கு வலது முழங்காலில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர், மருத்துவர்களிடம் சிகிச்சைப்பெற்று பிரியா தொடர்ந்து கால்பந்தாட்டப் போட்டியில் பங்கேற்று வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற போட்டியில் பங்கேற்ற பிரியாவுக்கு மீண்டும் காலில் வலி ஏற்பட்டதால் கடந்த மாதம் 28ஆம் தேதி பிரியா, பெரியார் நகர் அரசு புறநகர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு மருத்துவர்கள் பிரியாவுக்கு முழங்காலில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனக் கூறியதையடுத்து, மருத்துவர்கள் சோமசுந்தரம், பால் ராம்சங்கர் ஆகியோர் மாணவி பிரியாவுக்கு முட்டியில் சவ்வு அறுவை சிகிச்சை செய்தனர். அறுவை சிகிச்சைக்குப் பின் பிரியாவின் உடல் நிலை மோசமடைந்ததால் கடந்த 8ஆம் தேதி மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வந்த பிரியாவுக்கு காலில் ரத்தம் ஓட்டம் பாதிப்பு ஏற்பட்டதால் அவரது முழங்கால் பகுதி வரை அகற்றப்பட்டது. தவறான சிகிச்சையால்தான் மாணவி பிரியாவின் கால் அகற்றப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில் திடீரென நேற்று மாணவி பிரியாவின் உடல்நிலை கவலைக்கிடமான நிலையில், பிரியா தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டு மருத்துவர்கள் மூலம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று காலை கால்பந்தாட்ட வீராங்கனையான மாணவி பிரியா சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக தவறான சிகிச்சை அளித்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள மருத்துவர்கள் சோமசுந்தரம் மற்றும் பால் ராம்சங்கர் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும் அரசு சார்பில் பிரியா குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக குடும்பத்தாரிடம் புகாரைப் பெற்று பெரவள்ளூர் போலீசார் இயற்கைக்கு மாறான மரணம் என்ற பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக தற்போது பிரியா மரணம் தொடர்பாக அலட்சியமான மருத்துவப்போக்கினாலும், தவறான சிகிச்சையினாலுமே மாணவி உயிரிழந்துள்ளாரா என விளக்கமளித்து அறிக்கை, அளிக்கும்படி மக்கள் நலவாழ்வுத்துறைக்கு சென்னை காவல் துறை சார்பில் கடிதம் அனுப்பியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் நல்வாழ்வுத்துறை அளிக்கும் மருத்துவ அறிக்கையின் அடிப்படையிலேயே சம்மந்தப்பட்ட மருத்துவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்; சென்னை காவல் துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே மருத்துவமனையில் மாணவி பிரியாவின் உடலை வாங்க மறுத்து சக மாணவர்கள் மற்றும் குடும்பத்தார் தரப்பில் போராட்டம் நடைபெற்ற நிலையில், இறப்பில் தொடர்புடைய மருத்துவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை சார்பில் உறுதியளிக்கப்பட்டதைத் தொடர்ந்து உடலை பெற்றுச் சென்றனர்.
இதையும் படிங்க: கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழப்பு: ரூ.10 லட்சம் நிவாரணம்