சென்னை: செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த ஆலத்தூரில் குளோபல் ஃபார்மா ஹெல்த் கேர் மருந்து நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட கண் சொட்டு மருந்து அமெரிக்காவில் EzriCare, LLC and Delsam Pharma என்ற அமெரிக்க நாட்டு நிறுவனங்களால் அமெரிக்கா முழுவதும் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
இந்த மருந்தைப் பயன்படுத்தியவர்களில் ஒருவர் உயிரிழந்ததாகவும் 5 பேருக்குக் கண் பார்வை பாதிக்கப்பட்டதாகவும் 50க்கும் மேற்பட்டோர் பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளானதாகவும் சர்ச்சை எழுந்தது. இந்த கண் சொட்டு மருந்தைப் பயன்படுத்தியவர்களுக்குப் பல உபாதைகளை ஏற்படுத்தக்கூடிய பாக்டீரியா உடலில் இருப்பது கண்டறியப்பட்டதாகவும் அதற்கு முன்னதாக இந்த வகை பாக்டீரியாக்கள் அமெரிக்காவில் காணப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது. இதனையடுத்து அந்த கண் சொட்டு மருந்தைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு அமெரிக்க அரசு அந்நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தியது.
இதனால் ஏற்பட்ட பரபரப்பையடுத்து தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு வாரியம் இயக்குனர் விஜயலட்சுமி தலைமையில் மத்திய, மாநில மருந்துகள் கட்டுப்பாட்டுக் குழுவினர் நேற்று நள்ளிரவு 2 மணி வரை ஆலத்தூரில் உள்ள குளோபல் நிறுவனத்தின் உற்பத்தி ஆலையில் அதிரடியாக ஆய்வுகளை மேற்கொண்டனர்.
இது தொடர்பாக நம்மிடம் பேசிய விஜயலட்சுமி, "நேற்று மாலை 7 மணி முதல் 2 மணி வரை ஆய்வு மேற்கொண்டோம், மத்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியதிலிருந்து வந்த 3 நபர்கள் என மொத்தம் 5 நபர்கள் ஆய்வு மேற்கொண்டோம். அந்த ஆய்வின் போது மருந்து மற்றும் அந்த மருந்துக்கு பயன்படுத்தும் மூலப்பொருளை (raw material ) ஆய்வு செய்தோம். அனைத்து மருத்துகளையும் கிங் மருத்துவ வளாகத்திற்கு ஆய்வுக்கு அனுப்ப இருக்கிறோம். அதுமட்டுமின்றி அங்கு இருந்த அனைத்து ஆவணங்களையும் கைப்பற்றியுள்ளோம்.
தற்போது முதல் மறு அறிவிப்பு வரும் வரை அந்த நிறுவனத்தில் மருந்து தயாரிப்பை நிறுத்தி வைத்து இருக்கிறோம். கைப்பற்றிய மருந்துகளை ஆய்வுக்கு அனுப்பி 1 வாரத்துக்குள் முடிவு வரும் என எதிர்பார்க்கிறோம். மேலும், அமெரிக்கா இன்னும் முழு அறிக்கையை எங்களிடம் அளிக்கவில்லை. அது வந்த பிறகு மற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என தெரிவித்தார்.