சென்னை அண்ணா பல்கலைக் கழகத்திற்கு கிடைக்கவேண்டிய சீர்மிகு அந்தஸ்து பெறுவதற்கு மே 31ஆம் தேதிக்குள் தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளிக்காவிட்டால், வேறு பல்கலைக்கழகத்திற்கு மாற்றித் தரப்படும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறையின் சார்பில், இந்தியாவில் உள்ள அரசு, தனியார் பல்கலைக்கழகங்கள் உலகத்தரத்தில் உயர்த்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில் மாநில அரசின் பல்கலைக்கழகங்கள் 10 கல்லூரிகளைத் தேர்வு செய்துள்ளது. தமிழ்நாட்டில் சென்னை ஐஐடி, அண்ணா பல்கலைக்கழகம் ஆகியவை அந்தப் பட்டியலில் இடம் பெற்றிருக்கிறது.
சென்னை ஐஐடி மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் செயல்படுவதால், கடந்தாண்டு அதற்கு சீர்மிகு பல்கலைக்கழக அந்தஸ்து வழங்கப்பட்டது. அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சீர்மிகு அந்தஸ்து வழங்கும்பொழுது, இட ஒதுக்கீட்டில் பெரும் பாதிப்பு ஏற்படும் என்பதால், தமிழ்நாடு அரசு அதுகுறித்து ஆய்வு செய்யக் குழு அமைத்துள்ளது.
இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை சீர்மிகு அந்தஸ்து பெறுவதற்கான ஒப்புதல் கடிதத்தை மே 31ஆம் தேதிக்குள் அண்ணா பல்கலைக்கழகம் அரசிடமிருந்து பெற்றுத் தரவேண்டும். மே 31ஆம் தேதிக்குள் தமிழ்நாடு அரசு ஒப்புதல் வழங்காவிட்டால், அந்தஸ்தை வேறு பல்கலைக்கழகத்திற்கு மாற்றி வழங்குவதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை குறிப்பிட்டுள்ளது என தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து உயர் கல்வித் துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, ’மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை எழுதிய கடிதம் குறித்து, அண்ணா பல்கலைக்கழகம் அரசிற்கு அனுப்பி வைத்துள்ளது.
ஆனால், இட ஒதுக்கீடு பாதிக்கப்படும் என்பதால், அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும். எனவே, அரசு இது குறித்து முடிவெடுக்கும்' எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: கரோனா பகுதிகள் - அண்ணா பல்கலைக்கழகம் வரையறை!