சென்னை: பள்ளிக்கரணை காமகோடி நகர் காயிதே மில்லத் இரண்டாவது தெருவில் வசித்து வருபவர் முருகன் ரேவதி தம்பதியினர் இவருக்கு அருண்குமார் என்கிற மகனும், அம்பிகா என்ற மகளும் உள்ளனர். இந்த நிலையில் மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த திங்கட்கிழமை அவர்கள் குடியிருப்பு பகுதிக்குள் 6 அடிக்கும் மேல் மழை நீர் தேங்கியுள்ளது.
இதன் காரணமாக அப்பகுதியில் இருந்தவர்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேறி உள்ளனர். அப்போது முருகன் குடும்பத்தினரும் அங்கிருந்து வெளியே சென்று உள்ளனர் அதனைத் தொடர்ந்து முருகன் வீட்டைச் சென்று பார்த்துவிட்டு வருவதாகக் கூறி திங்கட்கிழமை மாலை சென்று உள்ளார்.
இதை அடுத்து வெகுநேரம் ஆகியும் முருகன் திரும்பி வராததால் அவரது மகன் அருண்குமார் தந்தையைத் தேடி அவரது வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது அருண் நடந்து சென்ற வழியில் இருந்த கால்வாயில் தேங்கிய நீரில் மூழ்கி மாயமாகியுள்ளார். இதுகுறித்து அருணின் குடும்பத்தினர் மற்றும் அவரது உறவினர்கள் மூலம் தகவல் தெரிவித்துத் தேடியுள்ளனர்.
அப்போது அருணின் தந்தை மட்டும் அவரின் வீட்டின் மொட்டை மாடியில் இருந்துள்ளார் ஆனால் அருண்குமார் பற்றி எந்த தகவலும் கிடைக்காமல் இருந்துள்ளது. இதன் தொடர்ச்சியாகத் திங்கட்கிழமை மாலை முதல் அருண்குமாரை அவரது குடும்பத்தினர் தேடிவந்த நிலையில் அருண் கிடைக்காததால் நேற்று (டிச 06) மாலை பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்த புகாரின் அடிப்படையில் அருண்குமாரின் புகைப்படத்தை வைத்து போலீசார் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்த நிலையில் ஆறடி பள்ளம் உள்ள கால்வாய் ஒன்றில் அழுகிய நிலையில் ஒருவரின் உடல் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் மீட்புக் குழுவினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று உடலை மீட்டு பரிசோதனை செய்தபோது அது காணாமல் போன அருண்குமார் என தெரியவந்தது.
இதன் பின்னர் போலீசார் அவரின் உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தந்தையைத் தேடிச் சென்ற மகன் தேங்கிய நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தண்ணீர் வடியாத கொரட்டூர் ரயில்வே சுரங்கம்!