சென்னை: பொது சுகாதாரத் துறை இயக்குநரகம் ஏப்ரல் 24ஆம் தேதி வெளியிட்டுள்ள புள்ளி விபர தகவலில், தமிழ்நாட்டில் மேலும் புதிதாக 18 ஆயிரத்து 849 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாட்டில் இருந்த 49 நபர்களுக்கும், சிங்கப்பூரிலிருந்து வந்த 2 நபர்களுக்கும், விக்டோரியாவிலிருந்து வந்த ஒருவருக்குமென 52 நபர்களுக்கு புதிதாக கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் இதுவரை 6 கோடியே 48 லட்சத்து 78 ஆயிரத்து 454 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறிவதற்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. இதன் மூலம் தமிழ்நாட்டில் 34 லட்சத்து 53 ஆயிரத்து 552 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருந்தது தெரிய வந்தன. இவர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 334 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் மருத்துவமனையில் இருந்து குணமடைந்த 28 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 34 லட்சத்து 15 ஆயிரத்து 193 என உயர்ந்துள்ளது. மேலும் கடந்த ஒரு மாதமாக புதிதாக கரோனா வைரஸ் தொற்று பாதிப்பினால் யாரும் இறக்கவில்லை. இதனால் இறப்பு எண்ணிக்கை 38 ஆயிரத்து 25 என உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் 34 நபர்களுக்கும் செங்கல்பட்டு 5 நபர்களுக்கும், விமானம் மூலம் வந்த மூன்று நபர்களுக்கும், புதுக்கோட்டை திருவள்ளூர் மாவட்டங்களில் தலா இரண்டு நபர்களுக்கும், கோயம்புத்தூர் காஞ்சிபுரம் மதுரை சேலம் தஞ்சாவூர் திருச்சி ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு நபர்கள் என 52 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளன.
சென்னை மாவட்டத்தில் 3035 நபர்களுக்கு பரிசோதனை செய்ததில் 36 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு, பரவல் விகிதம் 1.2 என அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் 0.2 என இருந்த நோய் தொற்று பரவும் விதம் 0.3 உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் 29 மாவட்டங்களில் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு யாருக்கும் இல்லை.