சென்னை: இளங்கலை மருத்துவப்படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வு இந்தியா முழுவதும் இன்று(ஜூலை17) நடைபெற்றுவருகிறது. தமிழ்நாட்டில் 18 மையங்களில் நீட் நுழைவுத் தேர்வு மதியம் 2 மணி முதல் 5.20 மணி வரை நடைபெற உள்ளது.
சென்னை மயிலாப்பூரில் உள்ள பி.எஸ் சீனியர் செகண்டரி பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த நீட் தேர்வு மையத்தில் மாணவர்கள் கடுமையான சோதனைக்குப்பிறகு உள்ளே அனுமதிக்கப்பட்டனர். காதுகளில் கம்மல் அணிந்திருந்த மாணவிகளின் கம்மலை கழட்டுமாறு பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் தெரிவித்தனர். மாணவர்களுக்கான ஹால் டிக்கெட், ஆதார் கார்டு போன்றவைகள் சரிபார்க்கப்பட்ட பின்னர் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
தேர்வு எழுத வந்த மாணவி ஒருவர் கூறும்பொழுது, நீட் தேர்விற்கு சிறப்பாகப் பயிற்சி எடுத்துள்ளதாகவும் முதன்முறையாக தேர்வு எழுத வந்துள்ளேன் எனவும்; நகைகள் எதுவும் அணிந்து கொள்வதற்கு அனுமதி வழங்கப்படவில்லை எனவும் கூறினார்.
அதேபோல் நீட் தேர்வு எழுதவந்த சென்னை ஜெருசலம் பொறியியல் கல்லூரியில் உதவிப்பேராசிரியராகப் பணியாற்றி வரும் லாவண்யா கூறும்பொழுது, 'தங்களுக்கும் தங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் உறவினர்களுக்கும் மருத்துவம் பார்ப்பதற்கு ஒரு மருத்துவர் தேவை என்று கருதினேன். ஏற்கெனவே தனக்கு மருத்துவப்படிப்பு படிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தும், மருத்துவப்படிப்பு கடினமாக இருக்கும் என கருதி படிக்கச்செல்லவில்லை.
அதன் பின்னர் பொறியியல் படிப்பினை இளங்கலை மற்றும் முதுகலையில் முடித்துள்ளேன். ஜெருசலம் பொறியியல் கல்லூரியில் உதவிப்பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறேன். மேலும் பிஹெச்டி முனைவர் பட்டம் பெறுவதற்கான ஆராய்ச்சியும் மேற்கொண்டு வருகிறேன். இன்னும் ஓராண்டு ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டி உள்ளது.
எனது தந்தைக்கு புற்றுநோய்ப் பாதிப்பு இருப்பதால், அது குறித்து மருத்துவ தகவல்களை பெறுவதற்கு சிரமமாக உள்ளது. தந்தைக்கும் மருத்துவ சிகிச்சை அளிக்கவும் மற்றவர்களுக்கு மருத்துவ சேவை வழங்கவும் மருத்துவம் படிப்பதற்காக கடந்த இரண்டு மாதமாக நீட் தேர்விற்குப் பயிற்சி பெற்றேன்.
முதன்முறையாக நீட் தேர்விற்கு வயது தொடர் விலக்கு அளிக்கப்பட்டவுடன் தனது கணவர், பெற்றோர் அளித்த ஆர்வத்தின் காரணமாக நீட் தேர்வினை எழுத வந்துள்ளேன். முதல்முறை எழுதும் தேர்விலேயே தகுதி பெற்று மருத்துவப் படிப்பில் சேர்வேன் என நம்புகிறேன். மருத்துவப்படிப்பில் சேரும் வரை அடுத்த ஆண்டும் தொடர்ந்து தேவைப்பட்டால் நீட் தேர்வில் எழுதி தகுதி பெறுவேன்' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:கலவரமான கள்ளக்குறிச்சி: கலவரக்காரர்கள் மீது கடுமையான நடவடிக்கை - டிஜிபி சைலேந்திரபாபு