சென்னை: தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிலிருந்து பயணிகள் விமானம் ஒன்று இன்று(டிச.27) அதிகாலை சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர்.
அப்போது ராமநாதபுரத்தைச் சேர்ந்த இரண்டு பயணிகள் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் கொண்டு வந்த கூடைகளை அதிகாரிகள் திறந்து பார்த்தபோது, அதில் உயிருள்ள பாம்புகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
பிறகு அவர்களது உடைமைகள் அனைத்தையும் சோதித்தபோது, அவர்களிடம் தாய்லாந்து வனப்பகுதியில் காணப்படும் அரிய வகை 40 மலைப்பாம்பு குட்டிகள், 13 நாகப்பாம்பு குட்டிகள், அரிய வகை குரங்கு குட்டிகள் 5, அபூர்வ உயிரினங்கள் 8 என மொத்தம் 66 உயிரினங்கள் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து சுங்க அதிகாரிகள் இருவரையும் பிடித்து வைத்துவிட்டு, சென்னை பெசன்ட் நகரில் உள்ள மத்திய வனவிலங்குகள் குற்றப்பிரிவு துறைக்குத் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த வனவிலங்கு அதிகாரிகள், தாய்லாந்திலிருந்து கடத்தி வரப்பட்ட உயிரினங்களை ஆய்வு செய்தனர்.
அதிலிருந்த பாம்புகள் கொடிய விஷம் கொண்டவை என்றும், கடத்திவரப்பட்ட அனைத்து விலங்குகளும் இந்தியாவிற்கு சம்பந்தம் இல்லாதவை என்றும்; இவைகள் தாய்லாந்து, வட அமெரிக்கா, ஆப்பிரிக்கா வனப்பகுதிகளில் காணப்படுபவை என்றும், இவற்றை இந்தியாவுக்கு கொண்டு வர அனுமதி இல்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த விலங்குகளை இந்தியாவுக்குள் அனுமதித்தால் ஆபத்தான நோய் பரப்பும் கிருமிகள் இங்குள்ள உயிரினங்களுக்கு பரவக்கூடும் என்றும் மத்திய விலங்கியல் குற்றப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து 66 உயிரினங்களையும் நாளை(டிச.28) அதிகாலை சென்னையிலிருந்து பாங்காக் செல்லும் பயணிகள் விமானத்தில் தாய்லாந்து நாட்டிற்கு திருப்பி அனுப்ப அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
கடத்தல் ஆசாமிகள் இரண்டு பேரையும் கைது செய்து, அவர்களை ஜாமீனில் வெளிய வர முடியாத கடுமையான பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யவும் உத்தரவிட்டனர். ஆபத்தான உயிரினங்கள் கடத்தி வரப்பட்ட சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: பாம்பன் ரயில் பாலத்தில் டிசம்பர் 31 வரை போக்குவரத்து ரத்து - காரணம் என்ன?