சென்னை: ஆவின் நிர்வாகம் பால், நெய், வெண்ணெய் மற்றும் பாலில் இருந்து தயாரிக்கப்படும் பல்வேறு உணவுப் பொருள்களை விற்பனை செய்து வருகின்றது. இந்த நிலையில், இன்று முதல் நெய் மற்றும் வெண்ணெய் விலையை உயர்த்தி உத்தரவிடப்பட்டுள்ளது.
விலை உயர்வு நிலவரம்: 15 மில்லி நெய் பாக்கெட் ரூ.14க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது ரூ.15க்கு விற்பனை செய்யப்படுகிறது. 100 மில்லி பாக்கெட் ரூ.70ல் இருந்து ரூ.80 ஆகவும், 500 மில்லி லிட்டர் பாட்டில் ரூ.315ல் இருந்து ரூ.365 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
ஆவின் நெய் லிட்டர் பாக்கெட் 620.00 ரூபாயிலிருந்து 690.00 ரூபாயாகவும், ஜார் 630.00 ரூபாயிலிருந்து 700.00 ரூபாயாகவும் என ஒரு லிட்டருக்கு 70.00 ரூபாய் முதல் 100.00 ரூபாய் வரையிலும், வெண்ணெய் 100 கிராம் 55.00 ரூபாயிலிருந்து 60.00 ரூபாயாகவும், சமையல் வெண்ணெய் 500 கிராம் 260.00 ரூபாயிலிருந்து 275.00 ரூபாயாகவும், உப்பு வெண்ணெய் 500 கிராம் 275.00 ரூபாயிலிருந்து 280.00 ரூபாயாகவும் என ஒரு கிலோவுக்கு 30.00 ரூபாய் முதல் 50.00 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது என ஆவின் நிறுவனம் சார்பில் அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில் தெரிவிக்கபட்ட்டுள்ளது.
தமிழக அரசின் கீழ், ஒரு துறையாக ஆவின் நிர்வாகம் நாளொன்றுக்கு சுமார் 30 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்து வருகிறது. ஆவின் வெண்ணெய், நெய் அடுத்தடுத்து விலை உயர்த்தப்பட்ட நிலையில், சாமானிய மக்களிடைய அதிருப்தியை உருவாக்கியுள்ளது.
இந்த விலை உயர்வுக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதற்கு முன்னதாக, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸூம் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது குறித்து, தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் நிறுவனத் தலைவர் பொன்னுசாமி கூறியதாவது, "தமிழக அரசின் கூட்டுறவு பால் நிறுவனமான ஆவின் நிறுவனம் பால் உற்பத்தியாளர்களுக்கான கொள்முதல் விலையை உயர்த்தி வழங்காமல் பால் மற்றும் நெய், வெண்ணெய், பனீர் உள்ளிட்ட பல்வேறு வகையான பால் உபபொருட்களின் விற்பனை விலையை மறைமுகமாகவும், நேரடியாகவும் உயர்த்தி வருகிறது.
நெய், வெண்ணெய் விற்பனை விலை உயர்வினை பொதுமக்களுக்கு தெரிவிக்க பால் முகவர்களுக்கு போதிய கால அவகாசம் கொடுக்காமல் விற்பனை விலை உயர்வு தொடர்பான உத்தரவில் 13ம் தேதி கையெழுத்திட்டு, அதனை 14ம் தேதியே அமல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டிருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது.
இதனை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வன்மையாகக் கண்டிப்பதோடு, அதிகாரியை பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்துகிறது. மேலும், நெய் விற்பனை விலையை ஒரே ஆண்டில் (9மாதங்களில்) லிட்டருக்கு 115.00 ரூபாய் உயர்த்தி இதுவரை 9 மாதங்களில் மூன்று முறையாக உயர்த்தப்பட்ட விற்பனை விலையை ஒரே நேரத்தில் லிட்டருக்கு 100.00 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.
வெண்ணெய் விற்பனை விலையை கிலோவுக்கு 50.00 ரூபாய் வரை உயர்த்தி தனது முந்தைய சாதனையை முறியடித்து மீண்டும் ஒரு வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ள திமுக அரசுக்கும், ஆவின் நிர்வாகத்திற்கும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.
இந்த விற்பனை விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் எனவும், மக்கள் விரோத நடவடிக்கைகளில் திமுக அரசு தொடர்ந்து ஈடுபடுமானால் வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள் என்பதை தமிழக அரசுக்கும், ஆவின் நிர்வாகத்திற்கும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் முன்னெச்சரிக்கையாக தெரிவித்துக் கொள்கிறது.
அது மட்டுமல்லாமல், விநாயகர் சதுர்த்தி, தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் என தொடர்ந்து பண்டிகை காலங்கள் நெருங்கி வருவதாலும், ஐயப்பனுக்கு மாலை அணிந்து, விரதமிருந்து சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கும் நெய் பயன்பாடு அதிகளவில் தேவைப்படும்.
இந்த சூழலில் ஏழை, எளிய, நடுத்தர மக்களை கடுமையாக பாதிக்கும் வகையில், வரலாறு காணாத விலை உயர்வை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டு மக்கள் தலையில் மிகப்பெரிய நிதிச் சுமையை சுமத்தியுள்ள ஆவின் நிர்வாகத்தின் சர்வாதிகார போக்கினை தமிழக அரசு உடனடியாக தடுத்து நிறுத்தி அதனை திரும்பப் பெற உத்தரவிட வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வலியுறுத்துகிறது.
முன்னதாக, திமுக மின்சாரத்தால் ஆட்சியை பறிகொடுத்ததைப் போல இந்த முறை பால்வளத்துறையால் ஆட்சியை மட்டுமல்லாமல் நாடாளுமன்றத் தேர்தலிலும், வெற்றியைப் பறிகொடுப்பதை தவிர்க்க முடியாது என்பதை தமிழ்நாடு முதலமைச்சரின் தனி கவனத்திற்கு தெரிவித்துக் கொள்கிறோம்” என்று கூறினார்.
இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது,"ஆவின் நிறுவனம் சார்பில் பல்வேறு பொருட்கள் இருந்தாலும், நாங்கள் அடிப்படையாக பயன்படுத்துவது பால் தான், பண்டிகை காலங்கள் நெருங்கி வருவதாலும், நெய்யின் பயன்பாடு அதிகமாக இருக்கும். பல தனியார் நிறுவனங்களில் நெய் விலை அதிகமாக இருக்கும். மேலும், தரம் என்பது கேள்வி குறியாக இருந்து வருகிறது.
ஆவின் சார்பில் உற்பத்தி செய்யும் பொருட்கள் அனைத்தும் தரமானதாக இருக்கும் குறிப்பாக நெய் விலை குறைவாகவும், தரமாகவும் இருக்கும். ஆனால் தற்போது, விலை உயர்வு எங்களை அதிர்ச்சியடைய வைக்கிறது. இந்த விலை ஏற்றத்தை அரசு மறுபரீசிலனை செய்ய வேண்டும் என்றனர். இது குறித்து ஆவின் அதிகாரிகளை தொடர்பு கொண்ட போது, அவர்கள் தொலைபேசி அழைப்பை ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:"வேங்கைவயல் விவகாரத்தில் அரசு ஏன் மவுனமாக இருக்கிறது" - சென்னை உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி