தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களை அச்சுறுத்தி வரும் நிவர் புயல் இன்று (நவ.25) நள்ளிரவு முதல் அதிகாலையில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் கடலோரம், உள் மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் பாதிப்பால் கடலோர மாவட்டங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தால் மாணவர்களின் பாடப்புத்தகங்களும் பாதிக்கப்படக்கூடும்.
அவ்வாறு பாதிக்கப்படும் பகுதிகளில் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்களை வழங்குவதற்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. பாடப்புத்தகங்களை இழக்கும் மாணவர்களுக்கு தேவையான புத்தகங்கள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பேசிய பள்ளிக் கல்வித் துறை அலுவலர்,”தற்போது தேவையான பாடப் புத்தகங்கள் கையிருப்பு உள்ளன. புயலின் தாக்கம் முடிந்தபின்னர் பாதிக்கப்படும் மாணவர்கள் கணக்கெடுக்கப்பட்டு புத்தகங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.