இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு குறித்த ’800’ என்ற படத்தில் முன்னதாக நடிகர் விஜய் சேதுபதி நடிப்பதாக இருந்தது. தொடர்ந்து, இந்தப் படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு எதிராகவும் ஆதரவாகவும் சமூக வலைதளைங்களில் கருத்துகள் பரிமாறப்பட்டு வந்தன.
இதில் விஜய் சேதுபதிக்கு எதிராக கருத்து தெரிவிப்பதாக நினைத்து, ரித்திக் என்ற பெயர் கொண்ட ட்விட்டர் கணக்கிலிருந்து அருவருத்தக்க வகையில் பதிவிடப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த ட்விட்டர் பதிவில் விஜய் சேதுபதியின் மகளுக்கு பாலியல் வன்கொடுமை மிரட்டல் விடுத்து அந்த நபர் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் இது குறித்து சென்னை சைபர் கிரைம் காவல் துறையினர் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நடிகர் அஜித்தின் தீவிர ரசிகரான அந்த நபர், அந்தப் பதிவின் கீழ் ’வலிமை’ என்ற அஜித் படத்தின் பெயரை ஹேஷ்டேக்கில் இணைத்துள்ளார். இதனையடுத்து அந்த நபரின் ஐ.பி. முகவரியை வைத்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
முன்னதாக இதே போன்று சிஎஸ்கே அணி தொடர் தோல்வியை சந்தித்தபோது தோனியின் மகளுக்கு சமூக வலைதளத்தில் பாலியல் வன்கொடுமை மிரட்டல் விடுத்த குஜராத்தை சேர்ந்த நபரை காவல் துறையினர் கைது செய்திருந்தனர்.
இந்நிலையில், இது போன்று தொடர்ந்து பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிராக பாலியல் மிரட்டல்கள் விடுப்பது அதிகரித்து வருவது குறித்து, சமூக ஆர்வலர்கள் வேதனையும் கண்டனங்களும் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க...விஜய் சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல் : நடவடிக்கை எடுக்கக்கோரி கனிமொழி வலியுறுத்தல்!