சென்னை: மலேசிய நாட்டுத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சென்னை இடையே தினந்தோறும் ஏர் ஏசியா பயணிகள் விமானம் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி வழக்கம்போல் இன்று (நவ.13) ஏர் ஏசியா பயணிகள் விமானம் கோலாலம்பூரில் இருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளைச் சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அப்போது சென்னையைச் சேர்ந்த வள்ளி (31), ஆயிஷா (எ) சித்திகா (30) ஆகிய இரு பெண் பயணிகள் மீது சுங்கத்துறை அதிகாரிகளுக்குச் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. சந்தேகத்தின் அடிப்படையில் இரு பயணிகளிடமும் சோதனை மேற்கொண்டபோது, அவர்கள் இருவரும் சுற்றுலாப் பயணிகள் விசாவில் மலேசிய நாட்டிற்குச் சென்று விட்டு, இந்த விமானத்தில் சென்னைக்குத் திரும்பியது தெரியவந்தது.
தொடர்ந்து, அந்த இரு பெண் பயணிகளிடம் விசாரணையைத் தீவிரப்படுத்திய போது, அந்த இரண்டு பெண்களும் மிகுந்த பதட்டத்துடனும், பயத்துடனும் இருந்ததை அதிகாரிகள் கண்டனர். அதனால் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு அவர்கள் மீது சந்தேகம் வலுத்தது. அதனையடுத்து அந்த இரு பெண் பயணிகளையும் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணைக்காக சுங்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
பின்னர், அலுவலகத்தில் இருந்த பெண் சுங்கத்துறை அதிகாரிகள், இரு பெண் பயணிகளையும் தனி அறைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை மேற்கொண்டனர். அப்போது அவர்களுடைய உள்ளாடைகளுக்குள் தங்கப்பசையை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அந்த இரு பெண் பயணிகளிடம் இருந்து ரூ.1.25 கோடி மதிப்புடைய 2 கிலோ தங்கப்பசையைப் பெண் சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினார்கள். அதோடு, அந்த இரண்டு பெண் பயணிகளையும் சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: தென்னை மரங்களைத் துவம்சம் செய்த காட்டு யானைகள்..! வனத்துறை நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை..!