சென்னை விமான நிலைய தூய்மைப் பணியாளர்கள் சென்னை பன்னாட்டு விமான நிலைய பயணிகள் வருகை பகுதியைச் சுத்தப்படுத்திக் கொண்டிருந்தனர். வருகைப் பகுதியில் சுங்கச் சோதனை பிரிவிற்கு வெளிப்பகுதில் ஒரு குப்பைத் தொட்டியைச் சுத்தம் செய்தபோது, அதனுள் ஒரு பார்சல் மறைத்துவைத்திருப்பதைக் கண்டுள்ளனர்.
உடனடியாகத் தூய்மைப் பணியாளர்கள் சுத்தப்படுத்தும் பணியை நிறுத்திவிட்டு, பாதுகாப்பு அலுவலர்களிடம் கூறினார். பிறகு அங்குவந்த பாதுகாப்பு அலுவலர்கள் அந்த பார்சலை எடுத்துப் பிரித்துப் பார்த்தனர். அதனுள் பாலிதீன் கவரில் 23 லட்சம் ரூபாய் மதிப்பிலான 500 கிராம் தங்கப்பசை மறைத்துவைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து பாதுகாப்பு அலுவலர்கள் உடனடியாக அந்தத் தங்கப்பசையை சென்னை விமான நிலைய சுங்கத் துறை அலுவலர்களிடம் ஒப்படைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த சுங்கத் துறை அலுவலர்கள் விசாரணை நடத்திவருகின்றனர்.
விசாரணையில் துபாய், இலங்கை போன்ற வெளிநாடுகளிலிருந்து கடத்திவரப்பட்ட தங்கப்பசையாக இருக்கலாம். சென்னை விமான நிலையத்தில் சுங்கச் சோதனை கடுமையாக இருந்ததால், கடத்தல் ஆசாமி குப்பைத் தொட்டியில் தங்கத்தை மறைத்து வைத்துவிட்டுத் தப்பியிருக்கலாம் என்று சுங்கத் துறையினர் கூறுகின்றனர்.
இதையடுத்து குப்பைத்தொட்டி இருந்த பகுதியிலுள்ள கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தங்கம் கடத்தல் ஆசாமியைத் தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க: சூப்பர் மார்க்கெட்டுக்குள் புகுந்த கார்! சிசிடிவி காட்சிகள்