வெளிநாடுகளிலிருந்து சென்னை விமான நிலையத்திற்குப் பெருமளவில் தங்கம் கடத்திவருவதாக சென்னை விமான நிலயை சுங்கத் துறை அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத்தெடார்ந்து விமான நிலையத்தில் சுங்கத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது, தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கிலிருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த அமன்தீப் சிங் (26) என்பவரைச் சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணாகப் பேசியதால் அவரின் உடமைகளை சோதனையிட்டனர். அப்போது தங்கச்சுருள் தகடுகளை ஸ்டிரியோ பிளேயருக்குள் மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது.
பின்னர், அவரிடம் இருந்த 249 கிராம் தங்கத்தைப் பறிமுதல் செய்தனர். அதேபோல், பாரிஸ் நாட்டிலிருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த ஹாரூன் மரக்காயர் என்பவர் மறைத்துவைத்திருந்த 70 தங்க நாணயங்கள், ஒரு தங்க செயின், இரண்டு தங்கக்கட்டிகள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.
இரண்டு பேரிடம் இருந்தும் 47.8 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 1.2 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இருவரும் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: கல்லூரி மாணவர்களிடையே மோதல்: துப்பாக்கியுடன் வலம் வந்த மாணவர்!