6, 7, 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 50 விழுக்காடு அளவுக்குப் பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ளதாக மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கரோனா தொற்று காரணமாக பள்ளி மாணவர்களுக்கு நடப்புக் கல்வியாண்டில் ஆன்லைன், தமிழ்நாடு அரசின் கல்வித் தொலைக்காட்சி மூலமாகப் பாடங்கள் நடத்தப்பட்டுவருகின்றன.
9, 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெறுகின்றன. இந்த நிலையில், அவர்களுக்கான பாடத்திட்டம் 40 விழுக்காடு அளவுக்கு குறைக்கப்பட்டு அதற்கான அறிவிப்பை பள்ளிக் கல்வித் துறை ஏற்கனவே வெளியிட்டது.
வல்லுநர் குழுவின் அறிவுறுத்தல் அடிப்படையில் பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக 6, 7, 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 50 விழுக்காடு அளவுக்குப் பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் அறிவித்துள்ளது.
மேலும் குறைக்கப்பட்ட பாடத்திட்டம் குறித்த முழுத் தகவல்கள் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. 6 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குப் பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்காகப் பள்ளிகள் திறக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
9 முதல் 12 வரை மாணவர்களுக்காகப் பள்ளிகள் செயல்படுவதுபோல் 6 முதல் 8 வரை பள்ளிகள் திறக்க சாத்தியக்கூறுகள் இல்லை என்பதால் பள்ளிக் கல்வித் துறை தாமதம் செய்கிறது.
அதே நேரத்தில் 6 முதல் 8 வரை பள்ளிகள் திறக்க வேண்டுமென்றால், தனியாக ஒரு வழிகாட்டு நெறிமுறை வெளியிட வேண்டியது அவசியம் எனப் பள்ளிக் கல்வித் துறையில் தகவல்கள் கிடைக்கின்றன.