புதுச்சேரியில் வாராந்திர கோவிட் 19 மேலாண்மை கூட்டம், துணைநிலை ஆளுநர் மாளிகையில் நேற்று (மே.27) மாலை நடைபெற்றது. சுகாதாரத்துறை இயக்குநர் மருத்துவர் மோகன்குமார், புதுச்சேரியின் தற்போதைய கொரோனா நிலவரம் குறித்துப் படக்காட்சி மூலம் விளக்கினார்.
தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா தொற்றுத் தடுப்பு நடவடிக்கைகள், ஊரடங்கு கட்டுப்பாடுகளால் ஏற்பட்டுள்ள பயன்கள், தடுப்பூசி போடுவதில் எதிர்கொள்ளும் நடைமுறை சிக்கல்கள் ஆகியவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.
மேலும், ஊரடங்கு கட்டுப்பாடுகளின் பயனாக கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த சில நாள்களாக ஆயிரத்திற்கும் கீழாக குறைந்துள்ளது. அதேபோன்று கரோனா பரிசோதனைகள் வெகுவாக அதிகரித்துள்ளன. அதற்காக மருத்துவம், காவல், வருவாய், பிற துறைகளை சேர்ந்தவர்களின் பங்களிப்பு வெகுவாகப் பாராட்டப்பட்டது.
கரோனா பரவலை மேலும் கட்டுப்படுத்த ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீட்டிக்க வேண்டும் என்று கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.
கிராமப்புறங்களில் கரோனா தொற்று வேகமெடுத்திருப்பதால் குறிப்பிட்ட கிராமங்களை தேர்ந்தெடுத்து வீடு வீடாக சென்று தடுப்பூசி போடும் பணியை வேகப்படுத்த வேண்டும். கரோனா தொற்று இல்லாத கிராமங்களை உருவாக்க துண்டறிக்கை மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.