இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”வங்கக் கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் அதிதீவிரப் புயலாக கரையை கடக்கும்போது சுமார் 150 கிலோ மீட்டர் வேகம் வரை புயல் காற்று வீசும் என்பதால் ஏழு மாவட்டங்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு போக்குவரத்து சேவையும் ரயில் சேவையும் நிறுத்தப்பட்டுள்ளதோடு தேவையின்றி வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
ஆனால், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள், பல்வேறு துறை சார்ந்த தொழிலாளர்கள் நலன் குறித்து சிந்திக்க அரசு தவறி விட்டது என்பதைச் சுட்டிக்காட்ட நாங்கள் விரும்புகிறோம்.
நிவர் புயல் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கடுமையான சூறாவளிக் காற்றுடன் கனமழை பெய்து வரும் சூழ்நிலையில், அரசு பேருந்துகள் இயங்காத சூழலில், தொழிலாளர்கள் பணிகளுக்குச் செல்வது கடும் சிரமத்தை ஏற்படுத்தும். மேலும் கனமழை பெய்து வரும் சூழ்நிலையில் தொழிலாளர்கள் பணிகளுக்காக வெளியே வருவது மிகப்பெரும் ஆபத்தையும் விளைவிக்கும்.
எனவே நிவர் புயல் கரையைக் கடந்து இயல்பு வாழ்க்கை திரும்பும்வரை தமிழ்நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருள்கள் விநியோகம், அத்தியாவசியப் பணிகள் தவிர்த்து பிற நிறுவனங்கள் செயல்படத் தடை விதித்து, முழுமையான ஊரடங்கைப் பிறப்பித்து, அரசு, தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள், பல்வேறு துறை சார்ந்த தொழிலாளர்கள், பொதுமக்கள் நலன் காத்திட தமிழ்நாடு அரசு விரைந்து முடிவெடுத்து அறிவிக்க வேண்டுகிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: அத்துமீறிய மதுபான கடைகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து உயர்நீதி மன்ற மதுரை கிளை கேள்வி!