சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தலைமைச் செயலாளர் மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம், சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (ஜூன்.4) நடைபெற்றது. இதில் ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தளர்வுகளுடன் ஊரடங்கு
கரோனா தொற்று பாதிப்பு அதிகமாகவுள்ள மாவட்டங்களில் ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என்றும், தொற்று குறைவாக உள்ள மாவட்டங்களில் ஊரடங்கு தளர்வுகளுடன் நீட்டிக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. சுமார் 17 மாவட்டங்களில் தொற்று குறைந்துள்ளது. பத்து மாவட்டங்களில் தொற்று மிகத்தீவிரமாகவுள்ளது.
கரோனா தொற்று தீவிரமாகவுள்ள 10 மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும் என, சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அத்தியாவசியப் பணிகளுக்குத் தளர்வு
கரோனா தொற்று குறைந்துள்ள மாவட்டங்களில் அத்தியாவசியப் பணிகளுக்கு ஒரு சில தளர்வுகள் அளிக்க வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 142 அரசு மருத்துவமனைகளிலும், ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் மையம் அமைக்க தமிழ்நாடு அரசு திட்டம் வகுத்துள்ளதாகவும் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
எந்தெந்த மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள்
கரோனா தொற்று மூன்றாம் அலையை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயாராக உள்ளதாக சுகாதாரத்துறை அலுவலர்கள் கூறியுள்ளனர். அரியலூர், தர்மபுரி, சிவகங்கை, பெரம்பலூர், கரூர், தென்காசி, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கூடுதல் தளர்வுகள் கொடுக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சேலம், நாமக்கல், கோயம்புத்தூர், ஈரோடு, மதுரை, திருப்பூர், தஞ்சாவூர் , திருச்சி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் தளர்வுகளற்ற ஊரடங்கு தொடரும் என தகவல் வெளியாகியுள்ளது.
புதியதாக தொற்று பாதிப்பு குறைவாக உள்ள மாவட்டங்களான சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யக்கூடிய தளர்வுகள் வழங்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: 'நோ வேக்சின்' , 'நோ என்ட்ரி' : ககன் தீப் சிங் பேடி தகவல்