காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த ஒரகடத்தில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு ராணிப்பேட்டையில் இருந்து 26 பேரை ஏற்றிக்கொண்டு பேருந்து ஒன்று காஞ்சிபுரம் நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. பேருந்து சுங்குவார்சத்திரம் அருகே சென்ற போது நிலை தடுமாறி, அங்கே நின்று கொண்டிருந்த மற்றொரு பேருந்தின் மேல் மோதி விபத்துக்குள்ளானது.
இதில், பேருந்தில் இருந்த மூவர் பலத்த காயமடைந்தனர். அதில், திருமால்பூரைச் சேர்ந்த குமார் என்பவரின் மனைவி அரசு (32) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் பரந்தூரைச் சேர்ந்த பாலாஜி (26), நாராயணன் என்பவரின் மனைவி ருக்கு (42) ஆகியோர் பலத்த காயமடைந்துள்ளனர்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சுங்குவார்சத்திரம் காவல் துறையினர் காயமடைந்த இருவரையும் மீட்டு ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, அரசுவின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: தங்கையின் குடும்பத் தகராறை கேட்கச் சென்றவர் அடித்துக்கொலை: மூவர் கைது