சென்னை: மீன் சந்தைகளில் மக்கள் கூட்டம் படையெடுப்பதினால் கரோனா நோய்த்தொற்று பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி தலைமையில் நடைபெற்றது. இதில்,சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், மீன்வளத் துறை அலுவலர்கள், மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டத்திற்குப் பிறகு மாநகராட்சி ஆணையரும், மாநகர காவல் ஆணையரும் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர். அதில், "வார இறுதி விடுமுறை நாள்களில் காசிமேடு, நொச்சிக்குப்பம் பகுதிகளில் மீன் சந்தையில் மக்கள் அதிகம் கூடுகின்றனர் என அதிக புகார்கள் வந்தன. அதனை முறைப்படுத்த மக்கள் கூட்டத்தால் கரோனா பரவாமல் இருக்க மீன்வளத் துறை அலுவலர்கள், மீனவ சங்கப் பிரதிநிதிகளுடன் குறித்து ஆலோசனை மேற்கொண்டோம்.
மாநகராட்சி நடவடிக்கை
சந்தையை விரிவுபடுத்துவது, நேரக்கட்டுப்பாடுகள், வாகன நிறுத்தத்தை முறைப்படுத்துவது என மீன் சந்தைகளை எவ்வாறு ஒழுங்குபடுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாகச் சந்தையில் மக்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தி உள்ளோம்.
இவற்றை முறையாகச் செயல்படுத்துவதாக மீன்வள அலுவலர்கள், வியாபாரிகள் உறுதியளித்துள்ளனர். இதனைச் சரியான முறையில் செயல்படுத்துகின்றனரா என்று வரும் நாள்களில் நேரில் ஆய்வு செய்யவுள்ளோம். அதற்குப் பிறகு அதற்கேற்ப நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
மேலும், அங்குள்ள மீனவ வியாபாரிகள் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள இதுவரை ஆறு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மொத்த, சில்லறை வியாபாரிகளுக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது, தடுப்பூசி போடுவது அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது, மேலும் வரும் நாள்களில் சென்னையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா என்ற கேள்விக்கு கரோனாவின் தீவிரத்தைப் பொறுத்து நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மாநகராட்சி சார்பில் கரோனா விழிப்புணர்வு போட்டிகள்!