சென்னை: மேற்கு தாம்பரம் ரங்கநாதபுரம் பகுதியில் வசித்து வருபவர், காசிம் (45). இவரது நெருங்கிய நண்பரான மயிலாப்பூரைச் சேர்ந்த ஷானா வாஸ்கான் (43) என்பவர் கால் டாக்ஸி ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் காசிம்மிடம் வெளிநாட்டில் இருந்து சென்னை துறைமுகத்திற்கு வரும் கப்பல் ஒன்றில் அதிகளவு எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் வருகின்றது.
மேலும், இந்தக் கப்பல் என் நெருங்கிய நண்பனுக்குச் சொந்தமான கப்பல், அதனால் அந்த கப்பலில் இருக்கும் பொருட்களைக் குறைந்த விலைக்கு வாங்கி அதிக லாபத்திற்கு விற்கலாம் என்றும், தன்னிடம் பணம் இல்லை, பணம் உதவி செய்தால் எனக்கு கிடைக்கும் லாபத்தில் உனக்கும் ஒரு பெரிய பங்கு தருகின்றேன் என கூறியுள்ளார். இதற்கு காசிம் உடனே தன்னிடம் இருந்த நகைகளை விற்றும், நண்பர்களிடம் கடன் வாங்கியும் 10 லட்சம் ரூபாயைக் கொடுத்துள்ளார்.
அதன் பிறகு ஏழு நாட்கள் கழித்து வாங்கிய 10 லட்சம் ரூபாயுடன் மூன்று லட்சம் ரூபாயைச் சேர்த்து 13 லட்சம் ரூபாயை காசிம்மிடம் கொடுத்துள்ளார், ஷானா வாஸ்கான். அதன் பிறகு சிறுக சிறுக காசிம்மிடம் 66 லட்சம் ரூபாய் வரை வாங்கிக் கொண்டு நான்காண்டுகள் ஆகியும் வாங்கிய பணத்தைத் தரவில்லை எனத் தெரிகிறது.
இது குறித்து காசிம் பலமுறை ஷானா வாஸ்கானிடம் கேட்டபோது பணமெல்லாம் பொருட்களுக்கு முதலீடு செய்துள்ளதாகவும், வெளிநாட்டில் இருந்து கப்பல் வந்து கொண்டு இருக்கின்றது, சென்னைக்கு வந்தவுடன் பொருட்களை வாங்கி விற்று மொத்தமாகப் பணத்தையும் கொடுத்து விடுகிறேன் என்றும் கூறியுள்ளார்.
இதனை அடுத்து ஷானா வாஸ்கான், தாம்பரம் பகுதியைச் சேர்ந்த முகமது கனி (52) என்பவரிடம் வெளிநாட்டில் இருந்து பொருட்கள் குறைந்த விலைக்கு வருகின்றது என அதே பொய்யைக் கூறி முகமது கனியிடமும் சிறுக சிறுக 65 லட்சம் ரூபாய் வரை வாங்கி திருப்பித் தராமல் இருந்து உள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த முகமது கனி, ஷானா வாஸ்கானிடம் சென்று பணம் திருப்பி தரும்படி கேட்டுள்ளார். அப்பொழுது "பணம் எல்லாம் இல்லை. உன்னால் என்ன செய்ய முடியுமோ செய்துகொள்" எனக் கூறி கொலை மிரட்டலும் விடுத்ததாகக் கூறப்படுகிறது.
உடனே முகமது கனி பண மோசடி குறித்து தாம்பரம் குற்றப்பிரிவு ஆய்வாளிடம் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்குப் பதிவு செய்து ஷானா வாஸ்கானை தேடிச் சென்றபோது அவர் வீட்டில் இல்லாததால், தொலைபேசி மூலமாகத் தொடர்பு கொண்டு பண மோசடி குறித்து உங்களிடம் விசாரிக்க வேண்டும் எனக் கூறி தாம்பரம் காவல் நிலையத்திற்கு வரும்படி அழைத்துள்ளனர்.
ஆனால், ஷானா வாஸ்கான் காவல் நிலையம் வர மறுத்துள்ளார். உடனே காவல் நிலையம் வந்து பணம் எப்போது தருவீர்கள் என எழுதிக் கொடுத்துவிட்டுச் சென்றால் போதும் என பணிவாகக் கூறியதும், காவல் நிலையம் வந்த ஷானா வாஸ்கானை கைது செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. சென்னை உள்பட பல்வேறு பகுதியில் உள்ள நபர்களிடம் வெளிநாடுகளில் இருந்து கப்பலில் வரும் பொருட்களைக் குறைந்த விலைக்கு வாங்கி, அதை விற்று அதில் வரும் லாபத்தில் பெரிய தொகையைத் தருவதாகக் கூறி கோடிக்கணக்கில் பணத்தை வாங்கி உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்தது தெரிய வந்துள்ளது.
இந்த தகவல் அறிந்து பணம் கொடுத்து ஏமாந்த பலர், தாம்பரம் காவல் நிலையத்தை அணுகினர். எனவே, போலீசார் யார் யார் எவ்வளவு பணம் கொடுத்துள்ளனர் என்று விசாரணை மேற்கொண்டதில், ஒவ்வொருவரும் சிறுக சிறுக கோடிக்கணக்கில் பணத்தைக் கொடுத்துள்ளனர் என தெரிய வந்துள்ளது.
பணம் கொடுத்து ஏமாந்தவர்களிடம், முறையாக புகார் கொடுங்கள் எனவும், அதற்கு சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீசார் கூறி அவர்களை அனுப்பி வைத்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக ஷானா வாஸ்கானை தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
இதையும் படிங்க: க்யூஆர் கோடை மாற்றி ரூ.17 லட்சம் மோசடி செய்த கடை ஊழியர்.. தேனியில் பரபரப்பு!