சென்னை: பத்திரிகையாளரும் எழுத்தாளருமான மாலனுக்கு 2022ஆம் ஆண்டின் மொழிபெயர்ப்புக்கான 'சாகித்ய அகாதெமி விருது' அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இது குறித்து பலரும் விமர்சித்தும் ஆதரித்தும் வருகின்றனர்.
பிரபல இந்திய நாடக ஆசிரியர் சைரஸ் மிஸ்திரி 'Chronicle of a Corpse Bearer' என்ற ஆங்கில நாவலை எழுதியிருந்தார். இது குஜராத்தில் வாழும் பார்சி சமூகத்தில் புறக்கணிப்பிற்கும் ஒதுக்கலுக்கும் உள்ளான பிணந்தூக்கிகளின் வாழ்வை பின்புலமாகக் கொண்ட ஒரு காதல் கதையே ஆகும்.
இந்நிலையில் இந்நூலை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்து 'ஒரு பிணந்தூக்கியின் வரலாற்றுக் குறிப்புகள்' என்று மாலன் தமிழில் மொழிபெயர்த்து எழுதிய நாவலுக்கு 2021ஆம் ஆண்டின் 'சாகித்ய அகாடமி விருது' அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
சாகித்ய அகாடமி விருது: இந்திய அரசால் எழுத்தாளர்கள், நூல்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதாக சாகித்ய அகாடமி விருது கருதப்பட்டு வருகிறது. ஆங்கிலம் மற்றும் பல்வேறு மொழிகளில் வெளியாகும் தலைசிறந்த புத்தகங்களுக்கு ஆண்டுதோறும் சாகித்ய அகாடமி விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதேபோல, சிறந்த மொழி பெயர்ப்பு நூல்களுக்கும் சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டு வருகின்றன. இந்த விருதை பெறுபவர்களுக்கு ரூ.1,00,000 ரொக்கம், சால்வை, செப்புப் பட்டயம் ஆகியன வழங்கப்படும்.
சமூக வலைதளங்களில் எழுந்த சர்ச்சை: இந்த நிலையில், இந்த சாகித்ய அகாடமி விருது பெறும் மாலன் நாராயணன் சாகித்ய அகாடமியின் தமிழ்ப்பிரிவு ஆலோசனைக்குழுவில் இடம்பெற்று இருப்பது சர்ச்சைக்குள்ளாகி உள்ளது. சாகித்ய அகாடமியின் இணையதளத்தில் இடம்பெற்று இருக்கும் அவரது பெயரை ஸ்க்ரீன்ஷாட் செய்து பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்தும் விமர்சித்து வருகின்றனர். சிலர் விருது தேர்வு குறித்த பல்வேறு சந்தேகங்களையும் எழுப்பி வருகின்றனர்.
மேலும் ஒரு சிலர், மாலன் ஒரு சிறந்த எழுத்தாளர். அவரது சிறுகதைகள் அனைவரையும் ஈர்த்து சிறுகதைகள் எழுதத் தூண்டும் அளவிற்கு இருக்கும் எனச் சொல்கின்றனர். இவ்வாறாக அவருக்கு ஆதரவும் எதிர்ப்பும் சமூக வலைதளங்களில் இருந்து வருகிறது.
இந்த நாவல் ஆங்கிலத்தில் வெளியானபோதே, 2015ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது மற்றும் தெற்காசிய இலக்கியத்திற்கான DSC விருது என்ற சர்வதேச விருது உட்பட பல முக்கிய விருதுகளைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மதுரை புகைப்படக் கலைஞருக்கு உலக பத்திரிக்கை புகைப்பட விருது!