கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை உயர்கல்வித் துறை செயலாளர் கார்த்திகேயன் 5ஆம் தேதி வெளியிட்டுள்ளார்.
அதில், "அரசு, அரசு உதவிப்பெறும், பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள், சுய நிதிக் கல்லூரிகளில் 2021-22 ஆம் கல்வியாண்டில் மாணவர்கள் சேர்க்கைக்கான வழிமுறைகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். மாணவர்கள் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பங்களைப் பெற வேண்டும்.
கல்லூரிகளில் உள்ள பிரிவுகளின் விபரங்களை வெளிப்படைத் தன்மையுடன் தகவல் கையேட்டில் தெரிவிக்க வேண்டும். மாணவர்கள் சேர்க்கையில் விதிமீறல்கள் நடந்தால் அதற்கு முதல்வரும், மாணவர்கள் சேர்க்கைக்குழுவும் முழு பொறுப்பேற்க வேண்டும். இட ஒதுக்கீட்டு முறை அனைத்துப் பாடப்பிரிவிலும் கட்டாயம் பின்பற்றி அமல்படுத்தப்பட வேண்டும்.
அரசு உதவிபெறும் கல்லூரிகளில் சுயநிதிப் பிரிவில் உள்ள இடங்களில் மாணவர்கள் சேர்க்கைக்கு முன்னர் உதவிபெறும் பாடப்பிரிவுகளில் மாணவர்கள் சேர்க்கையை முடிக்க வேண்டும். கல்லூரிகளில் மாணவர்கள் சேர்கைக்கு தரவரிசைப் பட்டியல் தயார் செய்யப்பட்டு, இட ஒதுக்கீட்டு அடிப்படையில் மாணவர்கள் சேர்க்க வேண்டும்.
கலை அறிவியியல் கல்லூரிகளில் மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு, மாணவர்கள் சேர்க்கை நடத்தப்பட வேண்டும். மாணவர்கள் சேர்க்கைக்கு கரோனா பாதுகாப்பு விதிமுறைகளின்படி மாணவர்களை கல்லூரிக்கு வரவழைக்கக் கூடாது. கல்லூரியில் சேர விண்ணப்பித்த அனைத்து மாணவர்களுக்கும் மதிப்பெண் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் வெளியிட வேண்டும்.
மாணவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை
மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ்களை அரசு தேர்வுத்துறை இயக்குநர் அலுவலகத்தில் சரிபார்க்கும்போது போலி எனக் கண்டறியப்பட்டால், அவரின் சேர்க்கை ரத்துச் செய்யப்படுவதுடன், குற்றவியல் நடவடிக்கையும் எடுக்க வேண்டும். தரவரிசையை பின்பற்றியே மாணவர்கள் சேர்க்கை ஒவ்வொரு பிரிவிலும் நடத்தப்பட வேண்டும்.
மாணவர்கள் சேர்க்கைக்கு கல்லூரியின் முதல்வரே முழு பொறுப்பாளர். அரசுக் கல்லூரிகளில் உள்ள பாடப்பிரிவுகளுக்கு அனுமதிக்கப்பட்ட இடங்கள் முழுவதையும் நிரப்பிவிட்டால், கூடுதல் இடங்களில் மாணவர்களை சேர்க்க கல்லூரிக் கல்வி இயக்குநரிடம் அனுமதி கேட்கலாம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கோரிக்கை நிதிநிலைத் தாக்கலில் நிறைவேறுமா?