சென்னை: திருவல்லிக்கேணி வெங்கட்ரங்கன் பிள்ளை தெருவைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் ‘கிரசண்ட் சீ புட்’ என்ற பெயரில் கடல் உணவுகளை ஏற்றுமதி செய்யும் தொழில் செய்து வருகிறார். இவர் வாரந்தோறும் திருவாரூரில் இருந்து கடல் உணவுகளை தனியார் டிராவல்ஸ் மூலம் சென்னைக்கு கொண்டு வருவது வழக்கம்.
இந்நிலையில் ரவிச்சந்திரன் கடந்த ஜூலை 12ஆம் தேதியன்று சென்னை வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் திருவாரூர் முத்துப்பேட்டையில் இருந்து 5 பெட்டிகளில் சுமார் 110 கிலோ எடை கொண்ட சம்பா நண்டுகளை வாங்கி தாஜுதீன் டிராவல்ஸ் மூலம் கடந்த 11ஆம் தேதியன்று சென்னைக்கு அனுப்பினேன்.
அது சென்னை மண்ணடி நாராயணப்ப தெருவில் உள்ள பார்சல் அலுவலகத்துக்கு மறுநாள் காலை 7 மணிக்கு வந்தது. அந்த பார்சலை வாங்குவதற்காக பார்சல் அலுவலகம் சென்றபோது நண்டு கூடையை காணவில்லை. அதனை திருடிச் சென்று விட்டனர் என புகாரில் தெரிவித்து இருந்தார்.
இது தொடர்பாக வடக்கு கடற்கரை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து சம்பவம் நடந்த இடத்திலுள்ள சிசிடிவி கேமராக்களை சோதனை செய்துபார்த்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ஆட்டோ மூலமாக நண்டு பார்சலை திருடிச் செல்வது தெரியவந்தது.
ஆட்டோ பதிவெண் மூலம் காவல் துறையினர் அந்நபர் குறித்து விசாரணை நடத்தியதில் நண்டுகளை திருடிச்சென்றது தஞ்சாவூர், பேராவூரணியைச் சேர்ந்த பழனிவேல் என்பது தெரியவந்தது. தொடர்ந்து தஞ்சாவூர் சென்ற காவல் துறையினர் பழனிவேலுவை கைது செய்தனர்.
அவரிடம் இருந்து 2.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான 5 கூடைகளில் இருந்த சம்பா நண்டுகள் மற்றும் ஒரு பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். சிங்கப்பூருக்கு ஏற்றுமதி செய்ய கொண்டு வந்த 110 கிலோ சம்பா நண்டுகளை தொழிற்போட்டியின் காரணமாக திருடி சென்றதாகவும், திருடப்பட்ட நண்டுகள் அனைத்தும் கெட்டுப்போனதாகவும் மேலாளர் ஜெயக்குமார் வேதனை தெரிவித்தார்.
இதையும் படிங்க: மாணவனுக்குப் பாலியல் தொல்லை.. விடுதி வார்டன் சஸ்பெண்ட்!