இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
கரோனா நோய் தடுப்புக்கான தடுப்பூசிகள் கண்டுபிடித்து முழுமையாக மக்களுக்கு செலுத்தி நோய்த் தொற்றிலிருந்து மக்களை காப்பாற்ற வேண்டியது அவசியமான ஒன்றாகும்.
கரோனா தடுப்பூசிகள் தயாரிப்பில், தடுப்பூசிக்கு நோயைத் தடுக்கும் ஆற்றல் உள்ளதா, இதனால் உடல்ரீதியான பாதிப்புகள் வேறு ஏதேனும் ஏற்படுமா, பக்க விளைவுகள் பாதிப்பை ஏற்படுத்துமா என்பதையெல்லாம் தடுப்பூசி தயாரிப்பின்போது மூன்று கட்ட பரிசோதனைகளை நடத்திய பின்னரே தடுப்பூசியின் ஆற்றல் தொடர்பான விவரங்களை முழுமையாக தெரிந்து கொள்ள முடியும்.
இதுவரை இரண்டு கட்ட பரிசோதனை தரவுகளே வெளிவந்துள்ளன. மூன்றாம் கட்ட பரிசோதனை தரவுகள் முழுமையாக வெளிவராத நிலையில், அவசர கோலத்தில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்வது மருத்துவ அறிவியலுக்கு பொருத்தமானதல்ல. மக்கள் மத்தியில் அச்சம், பதற்றம் ஏற்படுவது தவிர்க்க இயலாதது. கரோனா நோய்த் தொற்று சற்று குறைந்துள்ள சூழ்நிலையில், முழுமையான பரிசோதனை தரவுகள் வெளிவந்த பிறகு தடுப்பூசி செலுத்துவதே மக்களுக்கு நம்பிக்கையளிக்கும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
தடுப்பூசி தயாரித்துள்ள சீரம் இன்ஸ்டிட்யூட் ஆப் இந்தியா நிறுவனமும், பாரத் பயோடெக் நிறுவனமும் மக்கள் அச்சத்தை அகற்றும் வகையில் மூன்றாம் கட்ட பரிசோதனை தரவுகளையும், அதன் செயல்திறனையும் முழுமையாக வெளியிட வேண்டுமெனவும், இந்திய மருத்துவ கவுன்சில் கரோனா தடுப்பூசியின் செயல்திறன் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்திட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.
கரோனா தடுப்பூசிகளின் செயலாற்றலையும், பாதுகாப்பு அம்சங்களையும் உறுதி செய்து அனைத்து மக்களுக்கும் இலவசமாக குறிப்பிட்ட கால வரையறைக்குள் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறது.
இதையும் படிங்க:கரோனா தடுப்பு மருந்தை ஆய்வு செய்த சேலம் ஆட்சியர்