மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரு பிரிவான தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், 'பட்டியல் சாதியினர் மீதான வன்கொடுமைத் தாக்குதல்களில் நீதிமன்றத் தீர்ப்புகள் கவலையளிக்கும் வகையில் உள்ளன. 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13ஆம் தேதி, உடுமலைப் பேருந்து நிலையத்தில் இருந்து வெளியில் வந்த சங்கர், கெளசல்யா இருவரையும், பட்டப்பகலில் கூலிப்படையினர் சரமாரியாக வெட்டியதில் சங்கர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
கூலிப்படையை ஏவி சங்கரைப் படுகொலை செய்த கெளசல்யாவின் தந்தை, தாய், அவரது உறவினர்கள் மற்றும் கூலிப்படையினர் என மொத்தம் 11 பேர் கைது செய்யப்பட்டனர். இரண்டு ஆண்டுகளாக திருப்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கில் நீதியரசர் அலமேலு, கெளசல்யாவின் தாய் அன்னலட்சுமி உள்ளிட்ட மூவர் வழக்கிலிருந்து விடுவிக்கப்படுவதாகவும், தந்தை உள்ளிட்ட ஆறு பேருக்குத் தூக்குத் தண்டனையும், மற்றவர்களுக்கு சிறைத்தண்டனையும் விதிக்கப்படுவதாகவும் தீர்ப்பு வழங்கினார்.
சாதி ஆணவப் படுகொலையில் குறுகிய காலத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பு இது. அரசின் சார்பில், கெளசல்யாவின் தாய் உள்ளிட்ட மூவரின் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது. அதேபோல், தூக்குதண்டனைக் குற்றவாளிகளும் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கில் இன்று (ஜூன் 22) வழங்கப்பட்ட தீர்ப்பில், கெளசல்யாவின் தந்தை சின்னசாமி வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். மேலும், மற்ற 5 பேரின் தூக்குத் தண்டனையும், ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, தாய் அன்னலட்சுமி உள்ளிட்ட மூவரின் விடுதலையை எதிர்த்த அரசின் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில், உடனடியாக தமிழ்நாடு அரசு, உரிய வலுவான, சான்றுகளை அளித்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திட வேண்டும் என தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது' எனத் தெரிவித்துள்ளது.