இது தொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாட்டின் உயரிய நீதி வழங்கும் அமைப்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகள் ஐந்து மாநில மொழிகளில் வெளியிடப்படும் எனத் தலைமை நீதிபதி அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. அவரவர் மொழியில் தீர்ப்புகள் கிடைக்கும்போதுதான் வழக்கில் சம்பந்தப்பட்டவர்களுக்குத் தீர்ப்புகளுடைய அனைத்து அம்சங்களையும் புரிந்து கொள்வதற்குப் பயன்படும். மேலும், உச்சநீதிமன்ற தீர்ப்புகள் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதால் நாடு முழுவதும் உள்ள மக்கள் இத்தீர்ப்புகளைப் புரிந்து கொள்வதற்கு அவரவர் தாய்மொழியில் வெளியிடப்படுவதே மிகச் சிறந்த வழியாகும்.
இந்தவகையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் அறிவிப்பு மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால் இந்தி, அசாமி, கன்னடம், தெலுங்கு, ஒடியா ஆகிய ஐந்து மொழிகளில் மட்டுமே தீர்ப்பு வெளியாகும் என்றஅறிவிப்பு மிகுந்த வருத்தத்தைத் தருகிறது. உலகின் மூத்த மொழியான செம்மொழியாம் தமிழ் மொழி அப்பட்டியலில் இடம்பெறவில்லை என்பது மிகுந்த வேதனையளிப்பதாக உள்ளது.
இன்று வரை நீதித்துறையின் பல்வேறு மட்டங்களிலும் தரப்பட்ட தீர்ப்புகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு “தீர்ப்புத்திரட்டு” என்ற இதழில் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றம் வெளியிட்டு வருகிறது என்பதையும் இத்தருணத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
எனவே, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளைத் தமிழ் மொழியிலும் வெளியிடுவதற்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.