இதுதொடர்பாக மாநிலச் செயலாளர் கே பாலகிருஷ்ணன் முதலமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில், தமிழக அரசு கரோனா வைரஸ் பரவாமல் இருக்க பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது பாராட்டத்தகுந்தது. இருப்பினும் கரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. பாதிக்கப்பட்டவர்கள் சில ஆயிரம் என்ற நிலை வருமாயின் தமிழக அரசு அதை சமாளிக்க உரிய முன் தயாரிப்புகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
தனியார் மருத்துவமனைகளில் இதற்கென ஒரு வார்டு ஒதுக்கி தயார் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது, இது போதுமானதாக தோன்றவில்லை மேலும் சில மருத்துவமனைகளிலும் ஒட்டுமொத்தமாக இதற்கான ஒதுக்கீடு செய்ய வேண்டும். தனியார் மற்றும் அரசு கல்லூரிகளை மருத்துவமனையாக மாற்றுவது போன்ற பணிகளை மேற்கொள்ளவேண்டும். செங்கல்பட்டில் உள்ள இந்துஸ்தான் பயோடெக் நிறுவனம் கரோனா வைரஸ் பாதிப்பு சோதனை செய்வதற்கு அனைத்து கட்டமைப்பு வசதிகளும் உள்ளன அதை பயன்படுத்திக்கொள்ளவும், அங்கு சானிடைசர் தயாரிப்பதற்கும், மத்திய அரசின் அனுமதியை பெறவேண்டும்.
தமிழக அரசே தொழிற்சாலை மூலம் சானிடைசர் உற்பத்தி செய்து நியாயவிலைக் கடைகள் மூலமாக இலவசமாக தமிழக மக்களுக்கு வழங்க வேண்டும். மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் ஆகியோருக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும். ஊரடங்கு அமலில் இருப்பதால் பொதுமக்கள் பலவிதமான இடர்பாடுகளைச் சந்தித்து வருகின்றனர் முக்கியமாக விவசாயிகள் தங்களது சாகுபடியான பொருள்களை விற்பனை செய்ய முடியாமல் அவை அழுகி வருகின்றன.
இத்தகைய அசாதாரண சூழ்நிலையில் அரசு மற்றும் ஆளும் கட்சி மட்டுமின்றி எதிர்க்கட்சிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஆகிய அனைவரையும் சந்திக்கவேண்டும். கூட்டம் நடத்த முடியாவிட்டாலும் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதலமைச்சரை கேட்டுக்கொள்கிறேன் என கடிதத்தில் தெரிவித்துள்ளார்.