தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் காவல்துறையால் 13 அப்பாவி பொதுமக்கள் சூட்டுக் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் நடைபெற்று இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு, நினைவேந்தல் நடத்தப்பட்டு வருகிறது.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் நமது ஈ.டிவி பாரத் செய்திகளுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில்,
கடந்த வருடம் மே 22 அன்று தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட ஆயிரக்கணக்கான மக்கள் அணிவகுத்தனர். முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பேர் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கான மக்கள் குண்டடிபட்டு ஊனமுற்றனர். ஆனால் இந்த தாக்குதலில் ஈடுபட்ட காவல்துறையினர் மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாதது வெட்கக்கேடானது என்று சாடியுள்ளார்.
மேலும், காவல்துறையினர் மீது தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், அவர்களை சிபிஐ விசாரிக்க வேண்டும் எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. காவல்துறையினர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று தீர்ப்பும் வழங்கப்பட்டுள்ளது. போராடிய மக்கள் கலவரத்தில் ஈடுபட்டதாகவோ, கலெக்டர் அலுவலகத்தை நாசம் செய்ததாகவோ எந்த அறிக்கையிலும் குறிப்பிடவில்லை என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், துப்பாக்கிசூடு சம்பவம் நடைபெற்று இன்றுடன் ஓராண்டு ஆகிறது. இந்த நாள் தமிழக வரலாற்றில் ஒரு கருப்பு தினமாக கருதப்படுகிறது. மேலும், போராடும் மக்களை அடக்குமுறையால் ஒருபோதும் அடக்க முடியாது' எனவும் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.