இந்தியாவில் கரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பதற்காக ஜனவரி 16ஆம் தேதி முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 45 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. ஆனால் பொதுமக்கள் அதிகளவில் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வம் காட்டவில்லை.
எனவே இதுகுறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி, அதிகளவில் தடுப்பூசியை போடுவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் ஏப்ரல் 14ஆம் தேதி முதல் 16ஆம் தேதிவரை 3 நாள்களுக்கு கரோனா தடுப்பூசி திருவிழா நடத்த மக்கள் நல்வாழ்வுத் துறை முடிவெடுத்துள்ளது. தற்போது நாள் ஒன்றுக்கு 1 லட்சத்திற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் நிலையில், அதனை 2 லட்சமாக உயர்த்த சுகாதாரத் துறை இலக்கு நிர்ணயித்துள்ளது.
தொழில் நிறுவனங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் ஆகியவற்றிலும் தடுப்பூசி முகாம்களை தேவைக்கேற்ப நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளன. விருப்பமுடைய நிறுவனங்கள் மற்றும் குடியிருப்போர் நல சங்கங்கள், உள்ளாட்சித் துறை மற்றும் நகர் நல அலுவலர்களை தொடர்புகொண்டு சிறப்பு முகாம்களை நடத்துவதற்கும் ஏற்பாடு செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.