தமிழ்நாட்டில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட ஓட்டுநர்கள், நடத்துனர்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அந்த அமைப்பின் பொறுப்பு மேலாண் இயக்குநர் இளங்கோவன் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், “நடத்துனர்கள், ஓட்டுநர்கள் நாள்தோரும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களுடன் நேரடியான தொடர்பில் இருந்து வருவதால் அவர்களுக்குக் கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட வாய்ப்பு அதிகமாக உள்ளது. இதன் காரணமாக அவர்கள் கட்டாயம் தடுப்பூசிப் போட்டுக்கொள்ள வேண்டும்” என குறிப்பிட்டிருந்தார்.
மேலும், கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மறுக்கும் ஓட்டுநர்கள், நடத்துநர்களுக்குக் கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டால் அவர்களுக்கு சிறப்பு விடுப்பு வழங்கப்படாது எனவும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை, பெருந்தொற்று காலத்திலும் மக்கள் சேவை ஆற்றி வரும் பணியாளர்களுக்கு சிரமத்தை அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. மேலும், ஊழியர்களை அச்சுறுத்தி, கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள மாநகரப் போக்குவரத்துக் கழகம் கூறியுள்ளதால், தொழிலாளர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
இதையும் படிங்க: கரோனா தடுப்பூசி வீண் செய்ததில் தமிழ்நாடு முதலிடம்