சென்னை: திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, சென்னை சைதாப்பேட்டை மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில், கடந்த இரண்டு நாட்களில் பிறந்த 13 குழந்தைகளுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தங்க மோதிரங்கள் அணிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், "கடந்த 2 நாட்களாக சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய சர்வதேச விமான நிலையங்களுக்கு வரும் பயணிகளில் 2 சதவீதம் பேருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டது.
வெளிநாடுகளில் இருந்து வரும் அனைவருக்குமே காய்ச்சல் பரிசோதனை செய்யப்படுகிறது. விமான நிலையங்களில் பின்பற்றப்படும் இந்த நடைமுறைகள் இனிமேல் தொடர வேண்டாம் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. ஆனால், கடந்த ஒரு வாரமாக சீனாவில் 30,000-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதனால், சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து மத்திய அரசிடம் கேட்டறிந்து, அதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்துவோம்.
எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் எந்த அலட்சியமும் இல்லை. தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அலட்சியமாக சிகிச்சைகள் வழங்கப்படுவதாக பொய்யான தகவல்கள் பரவி வருகின்றன. அதனை யாரும் நம்ப வேண்டாம். அரசு மருத்துவமனைகளின் மூலம் தினந்தோறும் 6,00,000 பேர் பயனடைகிறார்கள். 70,000 பேர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர். 10,000 அறுவை சிகிச்சைகள் நடைபெறுகின்றன.
நீட் விலக்கு மசோதா குடியரசு தலைவரிடம் இருந்து உள்துறை அமைச்சகத்திற்கும், சுகாதாரத்துறைக்கும், கல்வித்துறைக்கும் அனுப்பப்பட்டது. சுகாதாரத்துறையும், கல்வித்துறையும் சில கேள்விகளை எழுப்பி இருந்தன. தமிழ்நாடு அரசு அந்த கேள்விகளுக்கான பதில்களை அனுப்பி குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக காத்துக் கொண்டிருக்கிறது" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: பொது சுகாதாரத்துறை நூற்றாண்டு விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்