இந்தியாவில் கோவிட்-19 வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 169க்கும் மேல் உயர்ந்துள்ளது. இதையடுத்து மத்திய அரசு இந்த பெருந்தொற்றை தேசிய பேரிடராக அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டிலும் கோவிட்-19 வைரஸ் தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கல்வி நிறுவனங்கள், திரையரங்குகள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களை தற்காலிகமாக மூட அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், கோவிட்-19 தொற்று பரவாமல் தடுப்பதற்கு, ’அனைவரும் கை கழுவும் பழக்கத்தை என்னோடு இணைந்து செய்திடுங்கள்’ என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள துண்டு பிரசுரத்தில், ”கைகளை அடிக்கடி கழுவி, கோவிட்-19 வைரஸ் தொற்றை தவிர்க்குமாறு கூறியுள்ளார்.
அதில், ஒன்பது வண்ணமயமான விளக்கப்படங்களுடன் கைகளைக் கழுவுவதற்கான வழிமுறைகளும் இடம்பெற்றுள்ளன. குடும்பம், செய்தித்தாள் விநியோகிக்கும் சிறுவன், பால் விற்பனையாளர், நண்பர்கள், விவசாயிகள், குழந்தைகள் ஆகியோருடனும் கைகழுவும் பழக்கத்தை தொடங்குங்கள். கரோனாவை எதிர்த்துப் போராட இந்த பணியில் தயவுசெய்து என்னுடன் இணைந்திடுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ஒப்பந்த ஊழியர்கள் பணிப் புறக்கணிப்பு போராட்டம்