தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் வேகமாகப் பரவிவருகிறது. குறிப்பாக சென்னை போன்ற பெருநகரங்களில் கரோனா வைரஸ் தாக்கம் அதிதீவிரமாக உள்ளது. சென்னையில் மட்டும் நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கரோனா தொற்றினால் பாதிக்கப்படுகின்றனர்.
இந்தப் பரவலைத் தடுக்க சுகாதாரத் துறையும் மாநகராட்சியும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இருப்பினும் ராயபுரம், தண்டையார்பேட்டை, கோடம்பாக்கம் போன்ற இடங்களில் கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில், ராயபுரத்தில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை ஆறாயிரத்தை நெருங்குகிறது. ஜூன் 14ஆம் தேதி வரையிலும் ஐந்து ஆயிரத்து 56 நபர்கள் இந்த வைரசால் பாதிக்கப்பட்டிருந்தனர். இன்றைய நிலவரப்படி ஐந்து ஆயிரத்து 981 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆறு நாள்களில் கிட்டத்தட்ட 925 பேர் கரோனா வைரஸ் நோயால் ராயபுரத்தில் பாதிக்கப்பட்டுள்ளது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
நோய் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக ராயபுரம் பகுதியில் முகக்கவசம் வழங்குவது, மருத்துவ முகாம்கள் அமைத்து பரிசோதனை செய்வதும் என பல்வேறு தீவிரமான நடவடிக்கைகளை மாநகராட்சி செய்து வருகிறது. இந்த நிலையில் சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் மண்டல வாரியாக நோயால் பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
மண்டல வாரியாக கரோனா பாதிப்பு
- ராயபுரம் - 5,981 பேர்
- திரு.வி.க. நகர் - 3,356 பேர்
- வளசரவாக்கம் - 1,638 பேர்
- தண்டையார்பேட்டை - 4,869 பேர்
- தேனாம்பேட்டை - 4,652 பேர்
- அம்பத்தூர் - 1,374 பேர்
- கோடம்பாக்கம் - 4,149 பேர்
- திருவொற்றியூர் - 1,434 பேர்
- அடையாறு - 2,204 பேர்
- அண்ணா நகர் - 3,972 பேர்
- மாதவரம் - 1,046 பேர்
- மணலி - 547 பேர்
- சோழிங்கநல்லூர் - 723 பேர்
- பெருங்குடி - 762 பேர்
- ஆலந்தூர் - 808 பேர்
மொத்தமாக 15 மண்டலங்களில் 38 ஆயிரத்து 327 நபர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 21 ஆயிரத்து 98 நபர்கள் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மொபைலே கதி என்றிருக்கும் குழந்தைகளை மீட்பது எப்படி? - அதிர்ச்சித் தகவலும் தீர்வும்!