தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டம் கலைவாணர் அரங்கம் மூன்றாவது தளத்தில் இன்று (செப்.14) நடைபெற்றது. இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், பேரவைத் தலைவர் தனபால், அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
இதில் 13 சட்டப்பேரவை உறுப்பினர்கள் வருகைப் பதிவேட்டில் கையொப்பம் இடவில்லை. ஏற்கனவே கரோனா சோதனையில் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தொகுதி அதிமுக எம்எல்ஏ எஸ்.பி. சண்முகநாதன், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தொகுதி அதிமுக எம்எல்ஏ பொன். சரஸ்வதி, திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தொகுதி அதிமுக எம்எல்ஏ தூசி கே. மோகன் ஆகியோருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதியானது. இதனையடுத்து அவர்கள் 3 பேரும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இவர்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
இந்நிலையில் இன்று (செப்.13) இக்கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் கோவிட்-19 பாதுகாப்பு பெட்டகம் வழங்கப்பட்டது. இதில் N95 முகக்கவசம், கிருமி நாசினி, கையுறை, ஈரமான துடைப்பான்கள், Face shield உள்ளது.
மேலும் பத்திரிகையாளர்களுக்கு என மருத்துவ முகாம் கலைவாணர் அரங்கில் தரைத்தளத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பத்திரிகையாளர்கள் பரிசோதனை செய்துகொண்டு மாத்திரைகள் பெற்றுக்கொண்டனர். மேலும் தற்காலிக சட்டப்பேரவை வளாகமான கலைவாணர் அரங்கில் முதலமைச்சர், துணை முதலமைச்சர், சபாநாயகர் ஆகியோருக்கு தனி அறைகள் ஒதுக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.