தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்கும் பணிகளில் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்டோர் ஈடுபட்டு வருகின்றனர். பேரிடர் காலத்தில் தங்கள் உயிரை பணையம் வைத்து வரும் முன்கள பணியாளர்களை பலரும் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில் செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், காவல்துறையினர் என மூன்று துறைகளில், ஒரு துறைக்கு 100 என்ற அளவில் மூன்று துறைகளைச் சேர்ந்தவர்களின் குழந்தைகள் மொத்தம் 300 மாணவ, மாணவியருக்கு, 2020ஆம் ஆண்டின் பன்னிரெண்டாம் மதிப்பெண் அடிப்படையில் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் கட்டணம் இல்லா கல்வி அளிக்கப்படும் என்று அப்பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஐசரி கணேஷ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள காணொலி பதிவில், "கடந்த ஐந்து மாதங்களாக உலகத்தையே புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கும் கொடூரமான வைரஸ் தொற்றில் இருந்து நம்மை காப்பதற்காக மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறை, துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்டோர் தன்னலம் பார்க்காமல் சேவையாற்றி வருகின்றனர்.
அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் வரும் கல்வி ஆண்டில் 50க்கும் மேற்பட்ட பட்டப் படிப்புகளை கட்டணமில்லா கல்வியை கொடுக்க நாங்கள் தீர்மானித்துள்ளோம். இத்திட்டத்தின்படி ஒவ்வொரு துறையிலும் 100 மாணவர்களை தேர்ந்தெடுத்து மொத்தம் 300 மாணவர்களுக்கு இலவசமாக கல்வி வழங்க முடிவு எடுத்துள்ளோம்.
என்னுடைய வேண்டுகோள் என்னவென்றால், என்னைப் போன்று கல்வி நிறுவனங்கள் நடத்திக் கொண்டு இருப்பவர்கள் இதுபோன்று மாணவர்களுக்கு இலவச கல்வி அளித்தால் சிறு துளி பெரு வெள்ளம் போல் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் பயனடைவார்கள். அதனால் இதற்கு அனைவரும் உதவ வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: இயல்பு நிலைக்கு திரும்புமா சென்னை? - மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் சிறப்புப் பேட்டி!