தமிழ்நாட்டில் கரோனா தொற்றை கட்டுபடுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
பாரத் பயோடெக் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசியும், சீரம் நிறுவனம் தயாரித்துள்ள கோவிஷீல்டு தடுப்பூசியும் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஹைதராபாத்திலிருந்து புளுடார்ட் விமானம் மூலம் 556 கிலோ எடை கொண்ட 19 பார்சல்களில் 95 ஆயிரத்து 120 கோவாக்சின் தடுப்பூசி மருந்துகள் சென்னை விமான நிலையம் வந்தடைந்தது.
இதில் 17 பார்சல்களில் வந்த 85 ஆயிரம் கோவாக்சின் தடுப்பூசி மருந்துகளை சுகாதாரத்துறை அலுவலர்கள் பெற்றுக்கொண்டு, குளிர்சாதன வாகனம் மூலம் சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள மாநில தடுப்பூசி சேமிப்பு மையத்திற்கு கொண்டு சென்றனர்.
எஞ்சிய 2 பார்சல்களில் வந்த தடுப்பூசி மருந்துகளில், ஒரு பார்சல் கிண்டியில் உள்ள ரெயின்போ குழந்தைகள் மருத்துவமனைக்கும், மற்றொரு பார்சல் காவேரி மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டது.