சென்னை: காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அசோக் குமார் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், "கடந்த 2011 ஆம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே தண்டலத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நேரடி இரண்டாம் ஆண்டில் சேர்ந்தபோது, கல்விக் கட்டணமாக 2011 முதல் 2014 ஆம் ஆண்டு வரை 1 லட்சத்து 42 ஆயிரம் ரூபாய் கல்விக் கட்டணத்தை வங்கியின் கல்விக் கடன் மூலம் செலுத்தினேன்.
பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால் அதிகக் கட்டணம்
ஆனால் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதாலும், குடும்பத்தில் முதல் பட்டதாரி என்பதாலும் அரசின் உதவித் தொகையும் கல்லூரிக்கு நேரடியாக செலுத்தப்பட்டது. இந்நிலையிலும், என்னிடம் கல்லூரி நிர்வாகம் கூடுதல் கட்டணம் வசூலித்தனர். படிப்பை முடித்த பின்பு சில ஆண்டுகள் வங்கியில் பெற்ற கல்விக் கடனை செலுத்தினேன். மேலும் 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பாக்கியுள்ளது என வங்கி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் கல்லூரியை நாடிய போது ஒவ்வொரு வருடமும் கல்விக் கட்டணத்தில் அதிக கட்டணம் வசூலித்தது தெரியவந்தது. பொறியியல் கல்லூரி கல்விக் கட்டணத்தை வசூலிப்பதை அரசு நடைமுறைப்படுத்தி உள்ளபோதும், அதனைப் பின்பற்றாமல் அதிகக் கட்டணம் வசூலித்த தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உயர் கல்வித்துறை அலுவலர்களுக்கு மனு அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
வட்டியுடன் பணத்தை திருப்பித் தர கல்லூரிக்கு உத்தரவு
என்னிடம் வசூலித்தக் கூடுதல் கல்விக் கட்டணத்தை வட்டியுடன் திரும்பச் செலுத்த உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதி எம்.தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சம்பந்தப்பட்ட பொறியியல் கல்லூரி மீது நடவடிக்கை எடுக்க அண்ணாப் பல்கலைக்கழகம் பதிவாளருக்கும், மனுதாரரிடம் இருந்து வசூலித்த கூடுதல் கல்வி கட்டணத்தை வட்டியுடன் திரும்பச் செலுத்த கல்லூரி நிர்வாகத்திற்கும் உத்தரவிட்டு, வழக்கை முடித்துவைத்தார்.
இதையும் படிங்க:'கல்வியும் - சுகாதாரமும் அரசின் இரு கண்கள்' - மாநாட்டில் முதலமைச்சர் உரை