சென்னை: தர்மபுரி மாவட்டத்தில் காவல் ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார், ரஞ்சித். இவர் 20 ஆண்டுகள் கால காவல் பணியில் நேர்மை தவறாது பணியாற்றி வருகிறார். கடந்த ஆட்சியில் தமிழக அரசு 2019ம் ஆண்டு, இரு மாதங்களுக்கு தனக்கு ஊதியம் வழங்கவில்லை என வருத்தமுற்றார்.
மேலும், சம்பள பாக்கியை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலமுறை டி.ஜி.பி.க்கு மனு அனுப்பினார். மனு அளிக்கப்பட்டு பல நாட்கள் ஆகியும் மனு பரீசிலனை செய்யாமல் கிடப்பில் கிடந்தன. இந்த மனு பரிசீலிக்கப்படாததை அடுத்து, அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2020ம் ஆண்டு வழக்குத் தொடர்ந்தார்.
அந்த மனுவில், சம்பள பாக்கி வழங்கப்படாததால், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தன் மனைவியின் மருத்துவ செலவுகளை தன்னால் பார்க்க இயலவில்லை எனவும்; தனக்கு வழங்க வேண்டிய சம்பள பாக்கியை வைத்து மனைவிக்கு மருந்து மற்றும் மாத்திரைகள் வாங்க போதுமானதாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.
மேலும், தனக்கு இரு குழந்தைகள் உள்ளனர். அக்குழந்தைகளின் படிப்புச் செலவுகளையும் மேற்கொள்ள முடியாமல் தான் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்த 20 ஆண்டுகால பணியில் தனது நேர்மை காரணமாக 39 முறை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
நேர்மை தவறாது உழைத்ததற்கு ஊதியம் சரியான நேரத்தில் கிடைக்காமல் தான் மிகவும் கஷ்டப்படுகிறேன் எனத் தெரிவித்தார்.ஆட்சிகள் மாறிய நிலையிலும் தனக்கு மூன்று ஆண்டுகளாக சம்பள பாக்கி நிலுவையில் இருப்பதற்கான காரணம் என்ன?எனவும் கேட்டறிந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற அமர்வு நீதிபதி பட்டு தேவானந்த் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல் ஆய்வாளரின் சம்பள கோரிக்கை மனுவை, காவல் துறைத் தலைவரான டி.ஜி.பி. பரிசீலிக்காமல் தாமதப்படுத்தியது ஏன்? என கேட்டார்.
ஆட்சிகள் மாறிய நிலையில் சம்பள பாக்கியை இன்னும் தாமதப்படுத்துவது ஏன்? என சரமாரியான கேள்விகளைக் கேட்டார், நீதிபதி. மேலும்,இந்த சம்பவத்தில் மனுதாரர் எந்தளவுக்கு துன்புறுத்தப்பட்டுள்ளார் என்பது தெளிவாகத் தெரிகிறது எனவும்; அவர் இதனால் மனம் மிகவும் வருத்தமுற்றார் என்பது தெரிய வருகிறது. மேலும்,நாட்டில் காவல்துறை அதிகாரிகளின் செயல்பாடு எப்படி இருக்கிறது என்பதற்கு இந்த வழக்கு மிகச்சிறந்த உதாரணம் எனவும் அதிருப்தி தெரிவித்துள்ளார். காவல் துறை உங்கள் நண்பன் என்பதற்கிணங்க, அனைத்து அதிகாரிகளும் செயல்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இந்த வழக்கின் விசாரணையில் தெளிவாக தெரிய வருவதென்றால் தனது ஊதியத்தை மட்டுமே நம்பி இருக்கும் மனுதாரரின் சம்பள பாக்கியை அரசு வழங்காமல் தாமதப்படுத்துவதும், மனுதாரர் சம்பள பாக்கியை கோரிய விண்ணப்பத்தை பரிசீலிக்காத டி.ஜி.பி.யின் செயல் அரசியல் சாசனத்துக்கு விரோதமானது எனக் கூறி,இன்னும் ஒரு வாரத்தில் மனுதாரரின் விண்ணப்பத்தை பரிசீலித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க:தமிழ்நாட்டின் புதிய தலைமைச் செயலாளராக சிவ்தாஸ் மீனா நியமனம்