சென்னை: நடிகை த்ரிஷா கிருஷ்ணன் குறித்து ஆபாசமாக பேசியதாக, நடிகர் மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழக டிஜிபி-க்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து, பெண்களை இழிவுபடுத்தி பேசுதல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர், நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மன்சூர் அலிகான் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு நீதிபதி எஸ்.அல்லி முன்பு விசாரணைக்கு வந்தபோது மன்சூர் அலிகான் தரப்பில், உள்நோக்கத்தோடு வேண்டுமென்றே அவ்வாறு பேசவில்லை எனவும், இது தொடர்பாக நடிகை த்ரிஷா சார்பில் எந்த புகாரும் அளிக்கப்படாத நிலையில், தேசிய மகளிர் ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையிலேயே காவல்துறை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக வாதிடப்பட்டது.
காவல்துறை சார்பில், மன்சூர் அலிகானின் பேச்சு குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, மனு மீதான தீர்ப்பை நீதிபதி அல்லி தள்ளி வைத்துள்ளார்.