தூத்துக்குடி: ஆண்டாள் நகரைச் சேர்ந்தவர்கள் சலோமி பெபினா (32) மற்றும் அவரது கணவர் அகஸ்டின் (35). இவர்கள் இரண்டு பேரும் வெளிநாட்டில் வேலை தேடும் இளைஞர்களிடம், தங்கள் மூலம் வெளிநாட்டு கப்பலில் வேலைக்குச் சென்றால் அதிகமாக சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தைகள் கூறி, நம்ப வைத்து ரூ.2,50,000 முதல் ரூ.3,00,000 வரை கமிஷனாக பெற்றுள்ளனர்.
13 நபர்களை ஈரானுக்கு அனுப்பி குறைவான ஊதியமுள்ள வேலையில் அமர்த்தி சுமார் 30,00,000 ரூபாய் வரையில் லாபம் அடைந்ததுடன், மேலும் 3 நபர்களிடம் சுமார் 10,00,000 ரூபாய் வரையில் பணம் பெற்றுள்ளனர் சலோமி பெபினா - அகஸ்டின் தம்பதி.
இந்நிலையில், வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்பாமல் நம்பிக்கை மோசடி செய்து ஏமாற்றி விட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் சிலர் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களிடம் புகார் அளித்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன் புகார் தொடர்பாக விசாரணை நடத்த மாவட்ட குற்றப் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயராமுக்கு உத்தரவிட்டார்.
பின்னர் மாவட்ட குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் அந்தோணியம்மாள் தலைமையில், உதவி ஆய்வாளர் அனிதா, சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜ்குமார் உள்ளிட்ட போலீசார் இவ்விவகாரம் தொடர்பாக புலன் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, அகஸ்டின் மற்றும் அவரது மனைவி சலோமி பெபினா ஆகியோர் இணைந்து இளைஞர்களிடம் பணம் மோசடியில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது. பின்னர் இருவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: எங்கே செல்லும் இந்த பாதை.. சென்னையில் தானியங்கி மது விற்பனை இயந்திரம்!