சென்னை, செம்பியம் ரமணா நகர் ஜங்ஷனில் வசித்துவந்த வயதான தம்பதி குணசேகர்(65) மற்றும் செல்வி (58). இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். அனைவரும் திருமணம் செய்து கொண்டு தனியாக வசித்து வருகின்றனர். குணசேகரன் காவலாளியாக பணிப்புரிந்து வந்துள்ளார். இந்த நிலையில், கரோனா ஊரடங்கு காரணமாக அவர் வேலையின்றி வீட்டில் இருந்துள்ளார். இதனால் பணப்பற்றாக்குறை ஏற்பட்டு வீட்டு வாடகை கொடுக்க முடியாமலும், உணவில்லாமலும் குணசேகர் மற்றும் அவரது மனைவி தவித்து வந்துள்ளனர்.
குணசேகர் தனது மகன்களிடம் சென்று பணம் கேட்டுள்ளார். ஆனால், 3 மகன்களும் பணம் கிடையாது என தெரிவித்ததால், மனமுடைந்து அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதேபோல் நேற்றும் மகன்களிடம் சென்று உதவி கேட்டுள்ளார் .ஆனால், அவர்கள் உதவி செய்ய மறுத்ததால், இதுதான் நீங்கள் என் முகத்தை கடைசியாக பார்ப்பது என அவர்களிடம் கூறிவிட்டு வந்துள்ளார். பின்னர் மனமுடைந்த குணசேகர் மற்றும் அவரது மனைவி செல்வி, நேற்று (ஜூலை 23) காலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
இதனையறிந்த அக்கம்பக்கத்தினர், செம்பியம் காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு சென்ற காவலர்கள், இருவரின் உடலையும் கைப்பற்றி கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், அந்த வீட்டில் காவலர்கள் சோதனை செய்தபோது கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. அந்த கடிதத்தில் இறுதி சடங்குகளை காவல்துறையினர் செய்ய வேண்டும் என எழுதி இருந்தது. இதனால் உடற்கூறாய்வுக்குப் பிறகு காவலர்களே இறுதிச் சடங்குக்கான பணிகளை மேற்கொண்டனர்.